பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ‘லவ் டுடே’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்திருந்தார். ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.100 கோடிக்கும் அதிகமாக அள்ளி இந்திய அளவில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரதீப் ரங்கநாதன் ‘டிராகன்’ எனும் வெற்றி படத்தையும் கொடுத்தார். இது தவிர ‘டியூட்’ எனும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் பிரதீப். இதற்கிடையில் தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே – (LOVE INSURANCE KOMPANY) எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் படமானது 2025 செப்டம்பர் 18ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இப்படமானது 2025 அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வெளியான ‘டிராகன்’ படத்தை போல் ‘எல்ஐகே’ திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.