மணிகண்டன் நடிக்கும் குடும்பஸ்தன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவர் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் குடும்பஸ்தன் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை நக்கலைட்ஸ் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேகனா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. சுஜித் என் சுப்பிரமணியம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வைஷாக் இதற்கு இசையமைத்திருக்கிறார். மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த படமானது வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.