விஜயின் அரசியல் வருகை குறித்து நடிகர் அஜித் தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது தனது 69ஆவது படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பும் முழுவதும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளார். அதன்படி தனது 69 ஆவது படம் தான் தன்னுடைய கடைசி படம் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாலும் அவர் சினிமாவை விட்டு விலகுவது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகர் அஜித்திடம் உங்கள் துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர்கள் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அஜித், “எனக்கு அரசியலில் எந்த ஆர்வமும் கிடையாது. என் துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்களின் நம்பிக்கை. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த ஜனநாயக நாட்டில் சிறந்த விஷயம் என்னவென்றால் மக்கள் தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கலாம். என் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பதிலளித்துள்ளார்.