விஜய் மற்றும் அவரை சுற்றி இருக்கும் எல்லோரும் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் ஆட்சியாளர்களை பார்த்து ஊழல்வாதிகள் என்று சொல்ல தகுதி இல்லை என்றும் அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தவெக-வில் தேர்தல் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், தன்னுடைய கணிப்பின்படி தவெகவுக்கு 18 சதவீதம் வாக்குகள் இருப்பதாக கூறியுள்ளார். ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா உடன் மிகவும் நெருக்கமாக உள்ள அவர், எப்படியாவது ராகுல் காந்தியை கூட்டணிக்கு அழைத்துவந்து விடுவதாக உறுதியளித்து வந்தார். அதனை தவெகவினரும் நம்பி இருந்தனர்.
இந்த சூழலில் தவெகவுக்கு 18 சதவீதம் வாக்குகள் மட்டுமே இருப்பாக அவர் பேட்டியில் கூறியுள்ளது, ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்களை கோபமடைய செய்துள்ளது. அந்த கோபத்தை தவெக செய்தி தொடர்பாளர் ரமேஷ் மூலம், உங்கள் பேரத்தை உயர்த்திக் கொள்வதற்காக தவெகவை பயன்படுத்த வேண்டாம். அப்படி அதிகாரப்பூர்வமான எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று சமூக வலைதளத்தில் பதிவிட வைத்துள்ளார்.

விஜய் சொல்வது போன்று அவர் முதன்மை சக்தியாக இருந்தால் யாரிடமும் போய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்சி தொடங்கிய நாளில் இருந்து ஜான் ஆரோக்கிய சாமி, அதிமுக, விசிக, டிடிவி தினகரன், காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளுக்கும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் யாராவது அதிகாரப்பூர்வமாக தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்தார்களா? என்டிஏ-வில் தங்கள் கூட்டணிக்கு வரும்படி, 25 இடங்கள் தருவதாக சொன்னார்கள். அதை தாண்டி வேறு யாரும் கூட்டணிக்கு வரவில்லை. டிடிவி தினகரன், விஜயை கையில் எடுத்துப் பேசினார். தற்போது என்டிஏவில் சேர்ந்ததும் விஜயை தூக்கி பேசிவிட்டார். காங்கிரஸ் மேலிடம் பேசிய பிறகு பிரவீன் சக்கரவர்த்தியும் அமைதியாகிவிட்டார்.
கடைசியாக அண்ணா, அண்ணி, அய்யா வருவதாக கடைசி நேரேட்டிவ்க்கு வருகிறார்கள். பிரேமலதா, விஜயை பயன்படுத்தி அதிமுக – திமுகவிடம் பேர வலிமையை கூட்டி வருகிறார். எனவே எல்லோரும் விஜயை ஊறுகாய் போன்று பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்துவிடுகிறார்கள். விஜயால் தனித்தோ, அவருடன் கூட்டணி வைத்தாலோ வெற்றி பெற முடியாது என்று எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியும். அதன் காரணமாகவே யாரும் அவரிடம் கூட்டணிக்கு வரவில்லை. அவர் ஒரு ஸ்பாய்லர் ஆக மட்டும் தான் இருப்பார்.

சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக – அதிமுக கட்சிகள் தேர்தல் வேலைகளில் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடத்துவதில் தீவிரமாக உள்ளனர். ஆனால் விஜய் அப்படி பிரச்சாரம் மேற்கொள்ள வில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டால் கூட விஜய் வெளியே வர மாட்டார். தேர்தல் தினத்தன்று ஒவ்வொரு வீட்டில் இருந்தும் விஜயும், விஜியும் கிளம்பி வருவார்கள் என்று விஜய் சொல்வதன் அர்த்தம் தான், தேர்தல் பிரச்சாரத்திற்கு வர மாட்டேன் என்பது தான். கிட்டத்தட்ட சர்க்கார் படம் போல வீடியோ போடுவார். அதை பார்த்துவிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அவர் 234 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்துக்கு செல்ல மாட்டார். சேலத்தில் மாவட்ட செயலாளர் பார்த்திபன் அவசர அவசரமாக கூட்டம் போட காரணம் விஜய், இனி பிரச்சாரத்துக்கு வர மாட்டார். அதனால் இந்த பிரச்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நினைக்கிறார். விஜய், பல வருடங்களுக்கு அரசியலில் இருக்க வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையோடு வந்துள்ளதாக கூறுகிறார். அதனால் தான் தவெக சார்பில் போட்டியிட ஒரு லட்சம் விருப்ப மனுக்கள் வாங்கியுள்ளனர். அப்போது விஜயின் இலக்கு 2036 தேர்தலாக தான் இருக்கும்.

தவெக-வில் ரூ.100க்கு விருப்ப மனுக்களை வாங்கினார்கள். ஆனால் அதன் உள்ளே ரூ.10,000 கட்டி திருப்பி அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து ஒவ்வொருவரையும் 200 முதல் 300 விண்ணப்பங்கள் வாங்க வேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது என்றால் ரூ.50 லட்சத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. இரண்டாவது நாளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சொன்னதும் கூட்டம் குறைந்துவிட்டது.
தவெகவில் ஒரு சீட்டுக்கு ரூ.2 கோடி தர வேண்டும் என்றும், அதையும் வெள்ளைப்பணமாக கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்கிறார்கள். வருமான வரி வழக்கில், விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கு கொடுத்ததாக 2.89 கோடி கணக்கு காட்டினார். ஆனால் அதற்கான கணக்கு எதுவும் அவரிடம் கிடையாது.

விஜய் மக்கள் இயக்கத்தில் இலவச உணவு போடுவதற்கு ரூ.3000 கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் ரூ.1500 தான் செலவு ஆகிறது. ஒரு நாளைக்கு ரூ.1500 திருடுகிறார் ஒரு மாவட்ட செயலாளர். இட்லி, சட்னியில் ஊழல் செய்பவர்களை தான் அமைச்சர் ஆக்க போவதாக சொல்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஊழல் செய்யும் விஜய், ஆட்சியில் உள்ளவர்களை ஊழல் செய்வதாக விமர்சிக்கிறார். விஜய் சம்பாதித்த பணத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு எதற்காக வரி கட்ட வேண்டும்? என்று அவரது ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர் கார் வாங்கியபோது இந்தியாவில் ஜிஎஸ்டி வரி கிடையாது.
விஜய் மட்டுமின்றி அன்றைக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய எல்லோருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. விஜய் இந்த வழக்கில் தனக்கு 2019க்கு முன்பாகவே அபராதம் விதித்து இருக்க வேண்டும் என்று சொன்னபோது, நீதிமன்றம் தலையில் கொட்டியது. தற்போதைய பட்ஜெட்டில் 100 சதவீத அபராதம் விதித்து இருப்பார்கள். அன்றைய நிலவரப்படி 10 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்பதால், குறைவாக அபராதம் விதிக்கப்பட்டது. விஜய் இன்று வரை கருப்பு பணம் தான் வாங்குகிறார். வருடா வருடம் சோதனைக்கு சென்றால், அவர் ஒவ்வொரு வருடமும் சிக்கி இருப்பார்.

விஜய் தன்னை ஒரு தூய சக்தி என்று விஜய் சொல்லக்கூடாது. அவரை சுற்றி இருக்கும் மாவட்ட செயலாளர்கள் ஊழல்வாதிகள். செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள் ஊழல் புகாரில் சிக்கியவர்கள். ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜுக்கு, எத்தனை குவாரிகள் என்று கணக்கு எடுத்தால் அவருடைய உண்மை முகம் தெரியும். முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் அவர் தொடர்பில் உள்ளாரா? இல்லையா? விஜய். அவரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் தூய சக்திகள் அல்ல. எல்லோரும் ஊழல் வாதிகள் தான். திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட அருண்ராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார். முதலில் சேலத்தில் நிற்க திட்டமிட்டிருந்தார். அந்த மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டதால் திருச்செங்கோட்டிற்கு சென்றுள்ளார்.
அவர் 2016ல் ஜெயலலிதாவிடம் சென்று கட்சியில் சீட் கேட்டார். அவர் மறுத்துவிட்டார். 2021ல் அண்ணாமலையிடம் சென்று சீட் கேட்டபோது அவர் தரவில்லை. அவருக்கு சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. நிறைய சொத்து சேர்த்து வைத்துள்ளார். இம்முறை தவெகவில் கிடைக்காவிட்டால், அடுத்த முறை அதிமுகவில் இருந்து போட்டியிடுவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


