மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (MGNREGA) நடைமுறையில் இருந்தபோது மாநில அரசுகளின் நிதிச் சுமை பெருமளவுக் கட்டுக்குள் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய ‘VB-G RAM-G’ திட்டம் மாநிலங்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்குரிய பொறுப்புகளையும் நிதிப் பங்களிப்பையும் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தியக் கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படை நோக்கமாகும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை வரம்பிற்கு மேல் அதிகரித்திருப்பது, மாநிலங்களின் சுய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஒட்டுமொத்த நிதி மேலாண்மையின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கை, மாநிலங்களின் நிதிச் சுயாட்சியை மேலும் பலவீனப்படுத்தும் செயலாகவே முடியும்” என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்களின் நிதிச் சுமையைக் கணிசமாக அதிகரிக்கும் இந்தத் திட்டத்தை எந்தவித எதிர்ப்புமின்றி தமிழகத்தில் செயல்படுத்த முனைந்தால், அது தமிழ்நாட்டின் நிதி நலன்களையும் பாரம்பரியமான மாநில உரிமைகளையும் பாதுகாக்கத் தவறிய செயலாகவே முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, தமிழகத்தின் நலன்களுக்குப் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய அம்சங்கள் குறித்து, ஒன்றிய அரசிடம் எவ்வித சமரசமுமின்றி மிக வலுவானதொரு எதிர் நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தனது அறிக்கையின் வாயிலாகத் வலியுறுத்தியுள்ளார்.
