Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சான்று கட்டாயம்! நிபந்தனையை தளர்த்த ஜவாஹிருல்லா வேண்டுகோள்..

புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சான்று கட்டாயம்! நிபந்தனையை தளர்த்த ஜவாஹிருல்லா வேண்டுகோள்..

-

- Advertisement -

ஜவாஹிருல்லா
புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சான்று கட்டாயம் என்கிற  நிபந்தனையை அரசு உடனே தளர்த்த வேண்டும் என ​மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “​தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிப்பவர்கள், சமையல் எரிவாயு (கேஸ் சிலிண்டர்) இணைப்பு பெற்றுள்ளதற்கான சான்றை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

​தற்போது நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பெரும்பாலான எரிவாயு முகமைகள் புதிய இணைப்புகளை வழங்க முடியாத சூழலில் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிர்வாக சிக்கலுக்காக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ரேஷன் கார்டு

​கடந்த மே 31-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்கள், ஜூலை 1-ஆம் தேதிக்குள் கேஸ் இணைப்பு சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது, நடைமுறையில் சாத்தியமற்றதாகும். இதனால் ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

​குடும்ப அட்டை என்பது வெறும் நியாயவிலை கடை பொருட்களை பெறுவதற்கான ஆவணம் மட்டுமல்ல; அது கல்வி, மருத்துவம், சமூக நலத்திட்டங்கள், வருவாய் சான்று உள்ளிட்ட பல்வேறு அரசுச் சேவைகளை பெறுவதற்கான அடிப்படை ஆவணமாக விளங்கி வருகிறது. குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் மற்றும் புதிதாக தனிக் குடும்பமாக பிரியும் இளம் தம்பதிகள் இந்நிபந்தனையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
​மக்களின் அன்றாட வாழ்வை எளிதாக்க வேண்டிய அரசின் நடைமுறைகள், அவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறக்கூடாது. சமையல் எரிவாயு உருளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தேசிய அளவிலான சிக்கலை கருத்தில் கொள்ளாமல், அதனை குடும்ப அட்டை வழங்குவதற்கான கட்டாய நிபந்தனையாக மாற்றுவது மனிதநேயமற்ற அணுகுமுறையாகும்.

​எனவே, நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் சீராகும் வரை, புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு சான்று கட்டாயம் என்ற விதிமுறையை தமிழக அரசு உடனடியாக தளர்த்த வேண்டும். மேலும், ஏற்கனவே விண்ணப்பித்திருப்போரின் மனுக்களை நிராகரிக்காமல், மாற்று சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” ​இவ்வாறு தனது அறிக்கையில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

MUST READ