Homeசெய்திகள்அரசியல்தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: தவெக – திமுக இடையே வெடித்த 'குதிரை பேர' மோதல்

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: தவெக – திமுக இடையே வெடித்த ‘குதிரை பேர’ மோதல்

-

- Advertisement -

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தவெக – திமுக இடையே வெடித்தது ‘குதிரை பேர’ மோதல்!
​முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ். பாரதி கடிதம்; தவெக எம்.எல்.ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாக திமுகவினர் 3 பேர் அதிரடி கைது!

தவெக
தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சக்கட்ட மோதல்களையும், திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே தற்போது “குதிரை பேர” அரசியல் புகார்கள் பரஸ்பரம் விஸ்வரூபம் எடுத்துள்ளன. ஒருபுறம் தவெக அரசு மீது திமுக ஆளுநரிடம் புகார் அளிக்க, மறுபுறம் திமுகவினர் மீது தவெக எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்க முயன்றதாகப் புகார் எழுந்து கைது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.

we-r-hiring

திமுகவின் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கடையநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி திமுக எம்.எல்.ஏ திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரையும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

​இந்த விவகாரத்தை திரு. வைகோ அவர்களே வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேசியதை சுட்டிக்காட்டியுள்ள திமுக, தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த குதிரை பேர முயற்சி முதலமைச்சர் மட்டத்திலேயே நேரடியாக நடந்ததாகக் கூறுகிறது. முதலமைச்சர் நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.
​திமுகவின் புகார்கள் ஒருபுறமிருக்க, தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் பிரம்மாண்ட பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சிப் புகார் கிளம்பியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். இளையராஜாவுக்கு, கருத்துக்கணிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்ற போர்வையில் திருநாவுக்கரசு என்பவர் பேசி, சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பதற்காக 35 கோடி ரூபாய் வரை பணம் தருவதாகப் பேரம் பேசியுள்ளார்.
​டாக்டர் இளையராஜா இதற்கு மறுப்புத் தெரிவித்தபோது அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த சதியின் பின்னணியில் திமுகவின் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ-வுமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இருந்ததாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களாகக் கருதப்படும் திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

​கடந்த சில வாரங்களாகவே தங்களின் எம்.எல்.ஏ-க்களை இழுக்க திமுகவின் முக்கியக் குழு முயன்று வருவதாக தவெக தரப்பு மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. மறுபுறம், விஜய் அரசு சட்டவிரோதமாக சதி செய்து தங்கள் கட்சியின் பலத்தைக் குறைக்கப் பார்க்கிறது என திமுக போர்க்கொடி தூக்குகிறது. ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே இருதரப்பிலும் மாறி மாறி குதிரை பேரப் புகார்கள் எழுந்து, கைது நடவடிக்கைகள் வரை சென்றிருப்பது தமிழக அரசியலை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

MUST READ