“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசிலும், அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளிலும் தலையிடுவதற்கு ஆளுநருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது; ஆளுநர் மாளிகை களமிறங்க எங்கும் செல்ல முடியாது” என்று தமிழக அமைச்சர் நிர்மல்குமார் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். அதேபோல, “வைகை புனரமைப்பு குறித்துக் கேட்கும் ஆளுநர், மதுரை எய்ம்ஸ் பணிகள் முடங்கியிருப்பது குறித்துக் கேட்பாரா?” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் சாடியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆகியோர் செய்தியாளர்களைத் தனித்தனியே சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது,
ஆளுநரின் எல்லை ராஜ் பவன் மட்டும்தான்
“மாநில அரசின் நிர்வாகத்தில் அல்லது துறைகளில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு அனுமதி கிடையாது. வரும் காலங்களில் துறை அமைச்சர்களின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் யாரும் ஆளுநருடன் ஆய்வுகள் நடத்தக்கூடாது. ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபரின் அதிகாரம் ராஜ் பவனோடு (ஆளுநர் மாளிகை) முடிந்து விடுகிறது. அங்கு அவருக்கு என்ன வேலை இருக்கிறதோ அதை மட்டும் அவர் பார்த்தால் போதும். தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் வேலைகளில் ஆளுநர் ஈடுபடக் கூடாது.
எங்கள் ஆட்சி தொடங்கியவுடனேயே வைகை அணையைத் தூர்வாருவதற்கான பணிகளை முதலமைச்சர் விஜய் விரைவாக முன்னெடுத்துள்ளார். அனைத்துக் கோப்புகளும் அனுப்பப்பட்டு, ஒன்றிய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இரண்டு வாரங்கள் ஆகிறது. அனுமதி வந்தவுடன் பணிகள் தொடங்கும். இதில் ஆளுநர் எங்கே களம் இறங்க முடியும்? அவர் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கித் தருவாரா அல்லது மண்வெட்டியை கையில் எடுத்துத் தூர்வாருவாரா? ஒப்பந்ததாரரை கூப்பிட்டு லாரிகளை எடுத்துக்கொண்டு அவர் தூர்வாரப் போவாரா? எங்களின் முதலமைச்சர் விஜய் அவர்கள் யாருக்கும் வளைந்து கொடுத்து ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசு அடிபணியாது.
திமுகவின் குதிரை பேர சதி முறியடிப்பு
’30 நாட்களில் இந்த அரசு கவிழும்’ என்று எந்த தைரியத்தில் ஸ்டாலின் சொன்னார்? 50 கோடி ரூபாய் கொடுத்து எங்களது எம்.எல்.ஏ-க்களை பர்சேஸ் (விலைக்கு வாங்க) பண்ணலாம் என்ற எண்ணத்தில், குதிரை பேர தைரியத்தில்தான் அவர் அப்படிச் சொன்னார். ஆனால், எங்களுடைய எம்.எல்.ஏ-க்கள் கிட்டக்கூட நெருங்க முடியாது. நெருங்கினால் ஆதாரப்பூர்வமாக மாட்டுவார்கள். தற்பொழுது ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதியின் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற குதிரை பேர ஆதாரங்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
எங்களுக்குத் தேவையான 120 எம்.எல்.ஏ-க்கள் பலம் இருக்கிறது; கூட்டணிகள் பலத்தோடு உள்ளது. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி குடும்பத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தான் திமுக, அதிமுகவிலிருந்து விலகி தினசரி ஆயிரக்கணக்கானோர் தவெக-வில் இணைந்து வருகின்றனர். தேர்தலைச் சந்திக்க நாங்கள் எப்போதுமே தயார். மேலும், முதல்வர் விஜய் குறித்து அநாகரிகமாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டப்பூர்வமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அரசின் இணை நிர்வாகத்தை ஆளுநர் நடத்த முடியாது என சு.வெங்கடேசன் எம்பி சாடல்
திஷா (DISHA) குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், ”ஆளுநர் மாளிகை என்பது மாநில அரசுக்கு இணையாக மற்றொரு இணை நிர்வாகத்தை (Parallel Administration) நடத்த முடியாது. வைகையாற்றைக் கடந்தவுடன் ‘தண்ணீர் இல்லை, புனரமைப்பு செய்யவில்லை’ எனக் கேட்கும் ஆளுநர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் நான் தலையிடுவேன் எனக் கூறுவாரா? அல்லது இன்னும் கட்டி முடிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்பாரா? வைகையைத் தூர்வாருவதை ஒரு மக்கள் இயக்கமாக நாங்கள் எடுத்துச் செல்வோம்.
மேலும் இன்றைய கூட்டத்தில், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இணைப்புச் சாலை இல்லாத கிராமங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி பயன்படுத்தப்படாமல் உபி (உத்தரப்பிரதேசம்) போன்ற மாநிலங்களுக்குச் செல்வது குறித்தும், RAM-G திட்டத்தில் 40% மாநில அரசு நிதி வழங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதித்தோம். அரசரடி ரயில்வே மைதானம் வருவாய்த்துறைக்குச் சொந்தமானது, அதை ரயில்வே ஆக்கிரமித்துக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மதுரை மாவட்டத்தின் கிராமப்புறங்களில் சில மாதங்களாகப் போக்சோ (POCSO) வழக்குகள் இரு மடங்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது” என்று தெரிவித்தார். அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு மற்றும் திமுகவின் குதிரை பேரப் புகார்களை முன்வைத்து அமைச்சரும், இடதுசாரி எம்பியும் மதுரையில் கூட்டாக ஆளுநர் மாளிகையையும், திமுகவையும் சாடியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? – ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
