
54 நாட்கள் ஆட்சியில் 207 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக அதிமுக மகளிர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.புவனேஸ்வரி தவெக அரசைச் சாடி காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

”அண்ணன் என்று நம்பிய சகோதரிகள் வேதனையில் உள்ளனர்”:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் எஸ்.புவனேஸ்வரி பேசியதாவது: “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு உங்களைச் சகோதரியாகவும், சகோதரனாகவும், உங்கள் வீட்டில் ஒருவனாகவும் இருப்பேன் என்றும், தாய்மாமன் சீர் தருகிறேன் என்றும் முதல்வர் விஜய் கூறினார். ஆனால், அவர் சொன்னதெல்லாம் வெறும் சினிமா வசனம் போலாகிவிட்டது.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் அதிகமானோர் தவெக-வைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு வந்த 54 நாட்களில் சுமார் 207 பாலியல் குற்றங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளன. இதுதவிர, வெளியில் தெரியாமல் பதிவு செய்யப்படாத குற்றங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால், பதிவான குற்றங்களில் 106 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறியுள்ளவை ஆகும். வாக்களித்த தமிழக மக்களும், அண்ணனாகப் பார்த்த சகோதரிகளும் இன்று பெரும் மன வேதனையில் இருக்கிறார்கள்.

”குதிரை பேரம் பேசும் அரசு”:
இந்த தவெக அரசின் முழு கவனமும் பிற கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளைக் குதிரை பேரம் பேசி தங்கள் பக்கத்திற்கு இழுப்பதிலேயே இருக்கிறது. இதற்காகவே தவெக-வினர் முழு நேரத்தையும் செலவிடுகிறார்கள். தவெக ஆட்சி என்பது ஒரு ‘பொய்க்கால் குதிரை ஆட்சி’யாகவும், ‘குதிரை பேரம் பேசும் ஆட்சி’யாகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் நாளுக்கு நாள் உச்சகட்டத்தை அடைந்து வருகின்றன. குட்கா கடத்தலில் தவெக-வினர் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. காவல்துறை மாநாட்டில் முதல்வர் என்ன சொன்னார், இப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை; அதன்பிறகும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
”ரீல்ஸ் எடுக்கும் சிரிப்புப் படை”:
அரசின் ‘சிங்கப்பெண் படை’ என்பது பல்வேறு இடங்களில் ரீல்ஸ் (Reels) எடுக்கும் படையாகவும், சிரிப்புப் படையாகவும் மாறிப் போயுள்ளது. இந்த தவெக ஆட்சியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பணிகளை விடுத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மட்டுமே போட்டு வருகிறார்கள். தமிழக மக்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள், இனி ஏமாற மாட்டார்கள்.
அதிமுக-வினர் மீது குதிரை பேரம் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி மாநாட்டைக் கொச்சைப்படுத்திப் பேசிய அமைச்சர் செங்கோட்டையனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் தொடர்ந்து மகளிர் அணியினர் மீது இது போன்ற விமர்சனங்களை வைத்தால், அவருக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக மகளிர் அணியினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்று எஸ்.புவனேஸ்வரி எச்சரித்துள்ளார்.
