Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் மீண்டும் தடம் பதிக்கும் ஃபோர்டு: முதலமைச்சர் விஜய்யுடன் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு - ரூ.3,250...

தமிழ்நாட்டில் மீண்டும் தடம் பதிக்கும் ஃபோர்டு: முதலமைச்சர் விஜய்யுடன் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு – ரூ.3,250 கோடியில் என்ஜின் உற்பத்தி ஆலை!

-

- Advertisement -

தமிழகத்தில் மீண்டும் தடம் பதிக்கும் வகையில், உலகப் புகழ்பெற்ற அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

முதலமைச்சர்

we-r-hiring

ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேசத் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி (Mathew Godlewski) தலைமையிலான இந்தக் குழுவினர், தமிழ்நாட்டில் தங்களது உற்பத்திப் பணிகளை மீண்டும் தொடங்குவது மற்றும் அடுத்தகட்ட விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதல்வருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

ரூ.3,250 கோடி முதலீடு – 600 பேருக்கு வேலைவாய்ப்பு:

சென்னையை அடுத்த மறைமலைநகரில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில், சுமார் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ‘என்ஜின்’ (Next-Gen Engines/Powertrains) உற்பத்திப் பணிகளைத் தொடங்குவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் நேரடியாக 600-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

முதலமைச்சர் விஜய் உறுதி:

இந்தச் சந்திப்பின் போது, ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் தொழில்முறை உறவை முதலமைச்சர் விஜய் நினைவு கூர்ந்தார். மேலும், மறைமலைநகர் ஆலையை முழு உற்பத்தித் திறனுடன் பயன்படுத்தி மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஃபோர்டு நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் இந்த புதிய உற்பத்தித் திட்டங்களுக்குத் தமிழக அரசு தரப்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம்:

ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தங்களது உலகளாவிய திறன் மையங்களை (Global Business Services) வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது உற்பத்தித் துறையிலும் இந்நிறுவனம் மீண்டும் கால் பதிப்பது தமிழ்நாட்டின் வாகன உற்பத்திச் சூழலை சர்வதேச அளவில் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார் ஐ.ஏ.எஸ், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் ஐ.ஏ.எஸ் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் முக்கியப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

MUST READ