ஊடகத்துறையில் நீண்டகாலப் பணி அனுபவம் இல்லாதவர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதாலும், தகுதியற்றவர்களைச் சோர்ஸாகக் (Sources) கொண்டு செய்திகளை வெளியிடுவதாலும் செய்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருவதாக ‘ஃபர்ஸ்ட் லைன்’ (First Line) யூடியூப் ஊடகத்தின் நேர்காணலில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில் பேசப்பட்ட முக்கியத் தகவல்கள்:


ஊடகத்துறையில் அனுபவமின்மை பிரச்சனை:
“பத்திரிகைத் துறையில் அடிமட்ட நிருபராகப் (Reporter) பணியாற்றி, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்களைப் பெற்று படிப்படியாக செய்தி ஆசிரியராக (Editor) வருபவர்களுக்கே செய்தித் துறையின் நுணுக்கங்கள் தெரியும். ஆனால், கள அனுபவமே இல்லாமல், குறுக்கு வழியில் செய்தி ஊடகங்களின் தலைமைப் பொறுப்பைப் பிடிப்பவர்களால் ஊடகத் துறையின் தரம் சீர்கேடடைகிறது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராக இருக்கும் எழுத்தாளர் சமஸ், ஊடகத் துறைக்கான அடிப்படை அனுபவங்கள் ஏதுமின்றி இப்பதவிக்கு வந்தவர் என்பதால், அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் கட்டுரைகளின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறார்.”
தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி மற்றும் காவல்துறை விசாரணை:
“தமிழகத்தில் தவெக (TVK) அரசைக் கவிழ்க்கச் சதி முயற்சி நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக-வின் முதன்மைக் குடும்பத்திற்கோ அல்லது திமுக-வின் கோர் டீமிற்கோ தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. சிலர் தங்களது சுய ஆதாயத்திற்காகச் செய்த சில விஷயங்கள் தற்போது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி வருகின்றன. முக்கிய அரசியல் அனுபவமோ, கள நிலவரமோ தெரியாமல் தவறான நபர்களைச் சோர்ஸாக நம்பிச் செயல்பட்டதன் விளைவாகவே, செய்தித் தொகுப்பாளராக இருக்கும் விஜயன் போன்றவர்கள் காவல்துறை விசாரணைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. முன்னணித் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்படுவது ஊடக வரலாற்றிலேயே மோசமான நிகழ்வு.”
வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி எனச் சாடல்:
“முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசு குறித்த கட்டுரையில் ‘கையில் இருக்கும் கைப்பிடியில்லாத கத்தி’ எனச் சமஸ் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், தற்போது உள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் காவல்துறை விசாரணைகளில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளே. எழுத்தாளராக இருப்பது வேறு; பத்திரிகையாளராகச் செயல்படுவது வேறு. களப் பணியும், சரியான செய்தி ஆதாரங்களைக் கையாளுதலும் இல்லாததே இதுபோன்ற ஊடக வீழ்ச்சிகளுக்குக் காரணம்” என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
