“நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்” – தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் எதிரொலிக்கும் முதன்மையான குரல். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நீட் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகப் பறைசாற்றி வரும் தவெக அரசு, இப்போது அதே நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் தமிழக மாணவர்களை வீதிக்கு வீதி கைது செய்து சிறைபிடிப்பது மிகப்பெரிய கேள்விகளையும் கொதிப்பையும் உருவாக்கியுள்ளது.


டெல்லியில் மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், அதற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் களமிறங்கியுள்ள மாணவர்களைக் காவல்துறை அடக்கியாள நினைப்பது ஏன் என்ற கேள்வி இப்போது மாநிலம் முழுவதும் எதிரொலிக்கிறது.
திருவொற்றியூரில் பரபரப்பு: கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது!
சென்னை திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், அவர்களை வீரியமாகத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அராஜகமான முறையில் அனைவரையும் அதிரடியாகக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.
காவல்துறையின் இந்த அடக்குமுறையைக் கண்டித்துக் கொதித்தெழுந்த இளைஞர்களும் தோழர்களும், திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அமைச்சரின் வார்த்தையும் காவலாட்சியின் நடவடிக்கையும்!
இன்று காலையில்தான் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அறவழியில் நடைபெறும் அமைதியான போராட்டங்களுக்கு அரசு நிச்சயம் அனுமதி அளிக்கும்” என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், களத்திலோ நிலவரம் தலைகீழாக உள்ளது.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது எழுப்பியுள்ள சரமாரியான கேள்விகள் தவெக அரசின் முகத்திரையைக் கிழிப்பதாக அமைந்துள்ளன:
“நாங்கள் வழக்கமாகப் போராட்டங்கள் நடைபெறும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில்தான் அனுமதி கேட்டோம்; புதிய இடத்தில் கேட்கவில்லை. அமைதியான போராட்டத்திற்கு அனுமதி தருவோம் என்று காலையில் சொன்ன அமைச்சர் ராஜ்மோகன், இப்போது அனுமதி மறுத்துக் கைது செய்ய வைத்துள்ளார். ‘மாணவர்கள் யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள்’ என்று அமைச்சர் சொல்கிறார். நாங்கள் கேட்கிறோம்… பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி மறுக்கத் தவெக அரசை தூண்டுவது யார்? நீட் தேர்வை எதிர்ப்பதாகச் சொல்லும் இந்த அரசு, மத்திய பாஜக அமைச்சரைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்?”
மாநிலம் முழுவதும் பரவும் அடக்குமுறைத் தீ!
சென்னை மட்டுமல்லாமல் திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை எனத் தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மாணவர்களின் போராட்டங்களுக்குக் காவல்துறை முட்டுக் கட்டை போட்டுள்ளது. தடையை மீறிப் போராடிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து, மாணவர் தலைவர்களைக் கைது செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களின் கண்ணியத்தைக் கூட மதிக்காமல் காவல்துறை நடத்தும் இந்த வேட்டை, மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசிக்கொண்டே, இன்னொரு புறம் மத்திய பாஜக அமைச்சருக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் சொந்த மாநில மாணவர்களைச் சிறையில் அடைப்பது எந்த வகையான அரசியல்? “நீட் எதிர்ப்பாளர்” என்ற போர்வையில் உலாவரும் தவெக அரசின் இந்த இரட்டை நிலைப்பாடும், அதிகாரத் தொனியும் சாமானிய மக்களின் பார்வையில் அம்பலப்பட்டு நிற்கிறது!
“மாணவர்கள் போராட்டம் நியாயமானது; பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு” – ஹிப்ஹாப் தமிழா ஆவேசம்!
