Homeசெய்திகள்சென்னைசென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி

-

- Advertisement -

ஆடி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் சந்தை களைகட்டியது.

சென்னை

we-r-hiring

ஆடி மாதத்தில் வீடுகளில் அம்மனுக்குக் கூழ் வார்த்து வழிபடுவதும், சிறப்புப் படையலில் மீன் உணவுகள் முக்கியப் பங்கு வகிப்பதும் வழக்கமாகும். இதன்காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீன் பிரியர்கள் குடும்பத்துடன் காசிமேட்டில் திரண்டனர்.

ஆழ்கடல் படகுகள் வருகை

சமீபத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அதிகளவில் கரை திரும்பியுள்ளன. இதனால் பெரிய வகை மீன்கள் முதல் சிறிய வகை மீன்கள் வரை சந்தைக்குத் தாராளமாக வந்தடைந்தன. விசைப்படகுகளில் இருந்து நேரடியாகக் கரையில் ஏலம் விடப்படுவதால், தரமான மற்றும் புதிய மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் போட்டிபோட்டு பேரம்பேசி வாங்கிச் சென்றனர்.

பிரதோஷ விரத நாட்கள் தொடர்வது மற்றும் மீன் வரத்து அதிகரிப்பு ஆகியவற்றால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் விலை கிலோவுக்கு ₹50 முதல் ₹300 வரை குறைந்து விற்பனையானது.

விலை நிலவரம்

கடந்த வாரம் கிலோ ₹1,500-க்கு விற்கப்பட்ட முழு வஞ்சிரம் இன்று ₹1,200-க்கும், ₹2,000-க்கு விற்கப்பட்ட ஸ்லைஸ் வஞ்சிரம் ₹1,700-க்கும் விற்பனையானது. அதேபோல ₹1,700-க்கு விற்கப்பட்ட பெரிய பாறை ₹1,400-க்கும், ₹1,100-க்கு விற்கப்பட்ட டைகர் இறால் ₹900-க்கும் குறைந்தது.

மேலும், கிலோ ₹1,000-க்கு விற்கப்பட்ட கொடுவா ₹850-க்கும், ₹700-க்கு விற்கப்பட்ட பாறை ₹600-க்கும், ₹600-க்கு விற்கப்பட்ட சங்கரா ₹450-க்கும், ₹650-க்கு விற்கப்பட்ட இறால் மற்றும் கிழங்கா மீன்கள் தலா ₹550-க்கும் விற்பனை செய்யப்பட்டன. நண்டு கிலோ ₹500-க்கும், வவ்வால் ₹1,100, கருப்பு வவ்வால் ₹900, நாக்கு ₹800, கடல் விரால் ₹600, களவான் ₹550, சுறா மற்றும் சீலா மீன்கள் தலா ₹500 என விற்பனையாகின.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் விலை சற்று குறைந்துள்ள போதிலும், வழக்கமான நாட்களை விட விலை இன்னமும் சற்று உயர்ந்து காணப்படுவதாகத் தொடர் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ஆடி மாதப் படையலை முன்னிட்டு காசிமேடு சந்தை வழக்கத்தை விட அதிக பரபரப்புடனும் கூட்ட நெரிசலுடனும் காணப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய்க்கு நீட் கோச்சிங் சென்டர்களில் முதலீடு: குற்றஞ்சாட்டும் டாக்டர் பொன்ராஜ்!

MUST READ