பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கிலோமீட்டர் நீளத்திற்குச் சுற்றுச்சுவர் அமைப்பது பெரும் பேரழிவை உருவாக்கிவிடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சென்னையின் முக்கிய இயற்கை வடிகாலாகவும், பெருவெள்ளத்தில் இருந்து நகரத்தைப் பாதுகாக்கும் இயற்கை அரணாகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விளங்கி வருகிறது.

இந்நிலையில், அங்கு 3 கி.மீ நீளத்திற்குத் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயற்கை சமநிலை பாதிக்கும்:
இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சதுப்பு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்புவது நீரோட்டத்தை முற்றிலும் தடைசெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மழைக்காலங்களில் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் பலத்த வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், அப்பகுதியின் இயற்கைச் சமநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பேரழிவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
த.வெ.க அரசுக்குக் கேள்வி:
தொடர்ந்து பேசிய அவர், “மக்களைப் பாதிக்கும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை உடனடியாக ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறிவரும் த.வெ.க அரசு, இந்த விவகாரத்தில் என்ன பதில் சொல்லப் போகிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, சதுப்பு நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மழையால் சேதமடைந்த சாலை: சரிந்து கிடந்த பேரிகார்டு மீது மோதி கார் விபத்து – பூந்தமல்லியில் பரபரப்பு!
