பணியிடத்தில் விபத்துக்குள்ளாகி மார்பின் இரு பக்கங்களையும் இரும்புக் கம்பி துளைத்த 24 வயது இளம் தொழிலாளிக்கு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஈஷா ஹூக் (Esha Hoque) என்பவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது பணியிடத்தில் சுமார் 10 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். விபத்தின்போது அங்கிருந்த இரும்புக் கம்பி அவரது வலது கீழ் மார்புப் பகுதியில் புகுந்து உடலைத் துளைத்து, இடது தோள்பட்டை அருகே வெளியேறியது. இவற்றுடன் வலது தோள்பட்டை மற்றும் இடது தொடைப் பகுதிகளிலும் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அவருக்கு உடனடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் முடிவுகளில், இரும்புக் கம்பி மார்புப் பகுதியைத் துளைத்ததுடன் இதயம், முக்கிய ரத்தக் குழாய்கள் மற்றும் உணவுக்குழாய் ஆகிய மிக முக்கியமான உறுப்புகளுக்கு மிக அருகில் சென்றிருந்தது தெரியவந்தது.
காயத்தின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவக் குழுவினர், உடனடியாக ‘ஸ்டெர்னோதொராக்கோட்டமி’ (Sternothoracotomy) எனப்படும் மார்புப் பகுதியை முழுமையாகத் திறக்கும் மிகச் சிக்கலான அவசர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.
மருத்துவர்களின் தொடர் முயற்சியால், இரும்புக் கம்பி மிகுந்த கவனத்துடன் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நுரையீரலில் ஏற்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் காயங்கள் துல்லியமாகச் சீரமைக்கப்பட்டன. உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு ஆபத்தான கட்டத்தைக் கடந்த மருத்துவர்களின் இந்தச் சாதனை அப்பகுதியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
கூடுவாஞ்சேரி அருகே கோர விபத்து: கார் மோதி கல்லூரி மாணவிகள் இருவர் பரிதாப பலி!
