சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பாக, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.![]()
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்காக இருக்கைகள் மற்றும் பந்தல் அமைக்க முற்பட்டனர். இதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இதுகுறித்து காவேரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் இலங்கீரன் கூறுகையில்,
ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என வழங்குவது தவறான முறையாகும்.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாயிகளுக்கான முழுமையான கடன் தள்ளுபடியை தமிழக வெற்றி கழக அரசு செயல்படுத்த வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
அரியலூர் அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம்: மாதவரத்தில் திமுக மாணவர் அணி அஞ்சலி!
