தாம்பரம் அருகே சோகம் – “இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?” என மனைவி கண்ணீர் மல்கப் பேட்டி தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில், இரண்டு மாத தவணைத் தொகையைக் கட்டாததால் ஃபைனான்ஸ் நிறுவனம் காரைப் பறிமுதல் செய்த மன உளைச்சலில், வாடகை கார் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்த விவரம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (35). கார் ஓட்டுநரான இவருக்கு வித்யா (27) என்ற மனைவியும், மிதுலா (8) என்ற மகளும், ஹரிகரன் (3) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் ‘சோழமண்டலம் ஃபைனான்ஸ்’ மூலம் கடன் பெற்று கார் வாங்கி, சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரில் வாடகைக்குக் குடியிருந்து கார் ஓட்டி வந்துள்ளார். மேலும், தனது சொந்த ஊரிலும் வீடு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

கார் பறிமுதலும் தற்கொலையும்:
சமீபத்தில் இரு மாதங்களுக்கான கார் தவணைத் தொகையை (EMI) செல்வராஜால் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட தனியார் ஃபைனான்ஸ் நிறுவனம் அவரது காரைப் பறிமுதல் செய்து சென்றுள்ளது.
வாழ்வாதாரமாக இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராஜ், தன் நிலையை உணர்ந்து குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறி வேதனைப்பட்டுள்ளார். கார் இல்லாததால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வந்த அவர், நேற்று இரவு நண்பர்கள் இல்லாத நேரத்தில் தனது அறையில் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விசாரணை:
இன்று காலை அறைக்கு வந்த நண்பர் அசோக்குமார், செல்வராஜ் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் & குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி:
சம்பவம் அறிந்து சொந்த ஊரிலிருந்து அலறி அடித்துக்கொண்டு வந்த செல்வராஜின் மனைவி வித்யா மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது.
“கார் போனால் போகட்டும், என் கணவர் உயிர் போச்சே! இந்த இரண்டு சின்னப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு நான் இனி என்ன செய்வேன்? என் கணவரின் தற்கொலைக்கு அந்த ஃபைனான்ஸ் நிறுவனம் தான் காரணம். வித்யா (இறந்தவரின் மனைவி)
“காரை பறிமுதல் செய்ததால் அவர் மிகவும் மனவேதனையில் இருந்தார். தொழில் பாதிக்கப்பட்டதால் தான் தவணை கட்ட முடியவில்லை, அதற்குள் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை. (உறவினர்)
சென்னை ஆட்டோ கட்டணம் உயருமா? – 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டண மாற்றம் கோரும் ஓட்டுநர்கள்!
