சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை வளாகம் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 8-வது நாளாக அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து விசில் அடித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
“விசில் சத்தமாவது கேட்கட்டும்!”
நாங்கள் தினமும் அதிகாலையிலேயே தெருக்களைக் கூட்டி, ஊரைச் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறோம். ஆனால் எங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்து அரசு எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனம் காப்பதாகப் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.

“நாங்கள் உரத்துக் குரல் எழுப்பியும் இதுவரை முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்லவில்லை. அதனால் தான் இந்த விசில் அடிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்தச் சத்தமாவது ஆட்சியாளர்களின் காதுகளில் சென்று சேரட்டும்” எனப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
முக்கியக் கோரிக்கைகள்:
பணி நிரந்தரம்: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மகப்பேறு & மாதவிடாய் விடுப்பு: பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மற்றும் மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
தினசரி ஊதிய உயர்வு: சென்னை ஆட்சியர் நிர்ணயித்த நாளிடை ஊதியமான ₹832-ஐ முழுமையாக வழங்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்: பெண் பணியாளர்களுக்குப் போதிய கழிப்பறை வசதிகள் மற்றும் பணி ஓய்வறைகள் அமைத்துத் தர வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்க அமைப்புகளும் பணியாளர்களும் தெரிவித்துள்ளதால், ரிப்பன் மாளிகை பகுதியில் காவல் துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்க குப்பை அள்ளுவதால் குப்பை மாதிரி நடத்துறீங்களா?” — போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!
