சென்னை நாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இன்றைய பிரம்மாண்டக் கட்டிடங்களுக்கும் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கும் சொந்தமான சென்னை நகரம் உருவான கதையையும், அதன் பழைய நினைவுகளையும் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.


‘வெள்ளையர் நகரம்’ முதல் ‘கறுப்பர் நகரம்’ வரை
1639-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள், செங்கல்பட்டு நாயக் வழியாக சந்திரகிரி ராஜாவிடம் ஒரு நிலத்தை வாங்கினர். அதுவே தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் அமைந்துள்ள இடமாகும். 1640-இல் எட்டு மூலக்கோண வட்டக் கோட்டையையும், இரண்டடுக்கு மெத்தை வீடுகளையும், அதைச் சுற்றித் தோட்டத்தையும் உருவாக்கி அதனை ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைத்தனர்.
அங்கு வாழ்ந்த ஆங்கிலேயர்களின் தேவைகளுக்காகச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியர்கள், போர்த்துகீசியர்கள், ஆர்மீனியர்கள் வசிக்கத் தொடங்கினர். 1700-களில் 2.5 கி.மீ. சுற்றளவில், 17 அடி கனத்திலான செங்கல் சுவருடன் குடிசைகளும் நடுத்தர வீடுகளும் அமைக்கப்பட்ட பகுதி ‘கறுப்பர் நகரம்’ (சின்னப்பட்ணம்) எனப்பட்டது. பின்னர் 1714-இல் ‘மதறாஸ்’ என்றும், பொருளாதார நலனுக்காகச் சுற்றியுள்ள கிராமங்களை இணைத்துச் ‘சென்னைப் பட்டணம்’ என்றும் மாறியது.
வளர்ச்சியும் வர்க்கப் பாகுபாடும்
போக்குவரத்தும் அஞ்சலகமும்: நில, நீர்வழிப் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி, மணிக்கு 1.5 கி.மீ. வேகத்தில் சென்ற டிராம் வண்டிகள் ஆகியவை சென்னையை அதிகாரக் குவிமையமாக மாற்றின. 1884 மே 1-இல் பொது அஞ்சல் அலுவலகம் கட்டப்பட்டது.
தொழிற்சாலைகளும் நகர்மயமாதலும்: துணி, கண்ணாடி, சோப்பு ஆலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உருவானதால் ஜமீன்தார்களும் பணக்காரர்களும் குடியேறினர்.
பொழுதுபோக்கும் கட்டணமும்: 1903-இல் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ‘சென்னைப் பொதுஜன தோட்ட வேடிக்கை’ பெண்களுக்கு உலகைக் காணும் வாய்ப்பை அளித்தது. 1913-இல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற மாயவித்தை நிகழ்ச்சிக்கு ₹1, ₹2, ₹3 என கட்டணம் வசூலிக்கப்பட்டது, நகரில் வர்க்கப் பாகுபாடு தோன்றியதை உணர்த்தியது.
சாதி, சமூக இயக்கங்கள் மற்றும் எம்டன் தாக்குதல்
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்னைக்கு வந்து தொழில் தொடங்கினர். 1901-இல் உருவாக்கப்பட்ட காஸ்ட் அண்டு கோஷா மருத்துவமனை, ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்ட சாதி ரீதியிலான விடுதிகள் ஆகியவை வெவ்வேறு பிரிவினர் இங்கு வந்து குடியேறியதைக் காட்டுகின்றன.
சுதேசிய இயக்கம், ஆசாரச் சீர்திருத்தங்கள், மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றச் சபைகள், மது ஒழிப்பு மாநாடுகள் என சென்னை அரசியல் ரீதியாகவும் பரபரப்பாக இயங்கியது. முதலாம் உலகப் போரின்போது 1914 செப்டம்பர் 22 அன்று ஜெர்மானியக் கப்பலான ‘எம்டன்’, சென்னைத் துறைமுகம் மீது பீரங்கி குண்டுகளை வீசியதில் மக்கள் அஞ்சி வெளியேறினர். அவர்களை அரசு சைதாப்பேட்டையில் குடியேற வைத்தது.
இழந்த இயற்கை வளம் திரும்புமா?
1860-120 காலகட்டத் தமிழ் பத்திரிகைப் பதிவுகளின்படி:
பசுமை சூழ்ந்த சென்னை: 1920-களில் ஈக்காட்டுத்தாங்கலுக்கு மேற்கே அடர்ந்த காடுகளும், அதில் குறவர் குடும்பங்களும் வசித்தன. 1915-இல் கீழ்ப்பாக்கம் மாதர் கிறிஸ்துவக் கல்லூரி மருதாணி வேலியால் சூழப்பட்டிருந்தது.
கூவம் நதியும் பறவைகளும்: நுங்கம்பாக்கம் அருகில் கூவம் நதி தூய்மையாக ஓடியது. அதில் மீன் பிடிப்பவர்களும், பசும்புற்கள் நிறைந்த வெளியில் ஆடு மாடுகள் மேய்வதும், மரகதப் பச்சைப் பசுமையும், பறவைகளின் ரீங்காரமும் நிறைந்து காணப்பட்டன.
அழகிய காட்சிகள்: பரங்கிமலையின் மாட்சிமை, திரிசூலம் மலையிலிருந்து பார்த்தால் தெரிந்த கடலில் மிதக்கும் நீராவிக் கப்பல்கள் என சென்னை இயற்கையின் சொர்க்கமாகத் திகழ்ந்தது.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியப் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளால் சென்னை பிரம்மாண்டமான பெருநகரமாக மாறியது. இதன் காரணமாக நாம் இழந்த அரிய இயற்கை வளங்களை இன்று வார்த்தைகளில் மட்டுமே காண முடிகிறது. இழந்த அந்த இயற்கைச் செழுமையை இனிவரும் காலங்களில் நம்மால் மீட்க இயலுமா?
இந்தியாவின் முதல் சாதனை: ஓடும் மெட்ரோ ரயிலில் கோலாகலமாகக் கொண்டாப்பட்ட 387-வது மெட்ராஸ் டே!
