நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், உயர்ஜாதியினருக்கான 10 சதவீத EWS (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெறும் இத்தொடக்க விழாவில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கொடியசைத்து வாகனப் பரப்புரையைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் பரப்புரைப் பயணப் பாதை
பெரியார் திடலில் தொடங்கும் இன்றைய இந்தப் பரப்புரை பயணமானது, ஐஸ் அவுஸ், ஆயிரம் விளக்கு, கே.கே. நகர், வடபழனி, எம்.எம்.டி.ஏ மற்றும் பெரம்பூர் வழியாகச் சென்று மூலக்கடையில் நிறைவடைய உள்ளது.
நீதிமன்ற அனுமதி
முன்னதாக, தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி நடத்தக் காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வை எதிர்த்துத் திராவிடர் கழகம் மாநில அளவில் நடத்தும் இந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு அந்தந்த மாவட்ட உள்ளூர் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் இந்த வாகனப் பேரணிக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.
ஆறு குழுக்களாகப் பரப்புரை
இந்த வாகனப் பரப்புரைப் பயணமானது தமிழகம் முழுவதும் மொத்தம் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலியில் நடைபெறும் வாகனப் பரப்புரைப் பயணத்தைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் தொடங்கி வைக்க உள்ளார்.
