குப்பையில் கிடைத்த பணம்
சென்னை மணலி பகுதியில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பையில் கிடைத்த ரூ.12,500 ரொக்கப் பணத்தை, அதனை தவறவிட்ட உரிய பெண்ணிடம் பத்திரமாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையான செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 19-வது வார்டுக்கு உட்பட்ட அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகரில் பிரியா என்ற பெண் தூய்மைப் பணியாளர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளைச் சேகரித்து, தரம் பிரிக்கும் மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
குப்பையை தரம் பிரித்தபோது சிக்கிய பணம்
தரம் பிரிக்கும் மையத்தில் குப்பைகளைப் பிரிக்கும் பணியில் பிரியா ஈடுபட்டிருந்தபோது, குப்பைகளுக்கு இடையே கிடந்த ஒரு கவரை கவனித்துள்ளார். அதனை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் ரூ.12,500 ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது.
பணத்தைக் கண்டெடுத்த அவர், அதனை தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் உடனடியாக தனது மேற்பார்வையாளர் பிரபாகரனிடம் தகவல் தெரிவித்து பணத்தை ஒப்படைத்துள்ளார்.
அதிகாரிகள் நடத்திய விசாரணை
இதையடுத்து, சம்பந்தப்பட்ட தூய்மைப் பணி அலுவலர்கள் அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகர் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் தனது வீட்டில் வைத்திருந்த ரூ.12,500 பணத்தை தவறுதலாக குப்பையுடன் சேர்த்து கொடுத்தது தெரியவந்தது.
உரியவரிடம் பத்திரமாக ஒப்படைப்பு
விசாரணையின் முடிவில் விஜயலட்சுமியை நேரில் சந்தித்த அதிகாரிகள், அவரிடம் தவறிப்போன ரூ.12,500 பணத்தை பத்திரமாக ஒப்படைத்தனர். குப்பையுடன் சென்ற பணம், தூய்மைப் பணியாளர் பிரியாவின் நேர்மையால் மீண்டும் கிடைத்ததை அறிந்த விஜயலட்சுமி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
நேர்மைக்கு குவியும் பாராட்டு
குப்பையில் கிடைத்த பணத்தின் மீது ஆசைப்படாமல், அதனை உடனடியாக தனது மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்க உதவிய தூய்மைப் பணியாளர் பிரியாவின் நேர்மையான செயல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
பணத்தின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், பிறருக்குச் சொந்தமான பொருளை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட்ட பிரியாவின் செயல், தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
