கோடம்பாக்கம் பகுதியில் சாலையோர இட்லி கடையில் மதுபோதையில் தகராறு செய்து, போலிஸாரிடம் ரோட்டில் உருண்டு புரண்டு ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் கோடம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


காரில் வந்து வீண் வம்பு
கோடம்பாக்கம் காமராஜர் காலனி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கீதா (45) என்பவர் சாலையோர இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு இவரது கடை அருகே காரில் வந்து இறங்கிய நபர் ஒருவர், அதிக மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சாப்பிடுவதற்கு முன்பாகவே, “இட்லி சூடா இருக்கா? இது என்ன கறி… போன மாசத்து கறியா இல்ல மூணு மாசத்து கறியா?” என நக்கலாகப் பேசி வீண் வம்பில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களிடம், “நான் அட்வகேட்… உங்களால் என்னை என்ன செய்ய முடியும்?” என மிரட்டும் தோனியில் தகராறு செய்துள்ளார்.
ரோட்டில் உருண்டு புரண்டு நாடகம்
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் கருணாகரன், என்ன பிரச்சினை என்று விசாரிக்க முற்பட்டார். உடனே அந்த போதை நபர் திடீரென நடுரோட்டில் உருண்டு புரண்டு, “முடிந்தால் என்னை ரிமாண்ட் செய்து பாருங்கள்” என ஆய்வாளரிடமே சவால் விட்டு ரகளை செய்துள்ளார்.
அதன்பின்னர், போதையில் இருந்த அவரைப் போலிஸார் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
காவல் நிலையத்தில் புகார்
இந்நிலையில், தன் கடையில் பழைய இறைச்சியைச் சமைப்பதாகப் பொய்யான தகவலைப் பரப்பி, தன் வாழ்வாதாரத்தையும் மானத்தையும் கெடுக்க முயன்ற அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீதா கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதையில் ரகளையில் ஈடுபட்டது தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரான சுமன் ராஜ் (24) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
