Homeசெய்திகள்சென்னைகல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!

கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!

-

- Advertisement -

சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரும் பேரணி — சைதாப்பேட்டையில் சாலை மறியலால் பெரும் பரபரப்பு! மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைக் கண்காணிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைக் கல்லூரி கல்வி இயக்ககம் திரும்பப் பெற்ற பின்னரும், அரசின் நடவடிக்கையைக் கண்டித்துக் கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் (AISF) சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.கல்லூரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிட முயன்ற AISF மாணவர்கள் அதிரடி கைது!

சைதாப்பேட்டையில் பேரணி & முற்றுகைப் போராட்டம்:
கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்பாகக் கண்காணிக்க வேண்டும் எனக் கல்லூரி கல்வி ஆணையர் தரப்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. இந்தச் சுற்றறிக்கைக்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அது திரும்பப் பெறப்பட்டது.

we-r-hiring

இருப்பினும், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டக் கூடாது என்றும், கேள்வி கேட்கக் கூடாது என்றும் கூறி அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை ஜனநாயக உரிமைகளை அரசு மறுப்பதாகத் தெரிவித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் அருகிலிருந்து கல்லூரி கல்வி இயக்கக அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது.

பேரணியாக வந்த மாணவர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதுடன், அரசுக்கு எதிராகப் பலத்த கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் உடனடியாக அங்கிருந்து அகற்றினர்.

தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட மாணவர்கள் முயன்றபோது, அலுவலகத்தின் முதன்மை நுழைவாயில் கதவுகளைப் போலீசார் பூட்டினர். அப்போது, பெண் மாணவிகள் சிலர் பூட்டப்பட்ட கதவுகளின் மீது ஏறி உள்ளே செல்ல முயன்றதால் அங்குப் பெரும் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. இறுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

“அரசியலமைப்புச் சட்ட உரிமையைப் பறிப்பதா?” — AISF நிர்வாகிகள் பேட்டி: முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய AISF மாநிலத் தலைவர் இப்ராஹிம்:

“மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்த அரசு, மாணவர்கள் கேள்வி கேட்கக் கூடாது எனக் கூறுவது சர்வாதிகாரப் போக்காகும். அரசின் இந்த நடவடிக்கையை மாணவர் பெருமன்றம் ஒருபோதும் ஏற்காது.

சங்கம் அமைப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும், போராடுவதற்கும் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு முழு உரிமை அளித்துள்ளது. மாணவர்கள் அரசியல் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அடிபணிகிறதோ என்ற கேள்வி எழுகிறது.” எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய AISF தென் சென்னை மாவட்டச் செயலாளர் மணி:
“தமிழ்நாட்டில் உள்ள 264 அரசு கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர்களே நியமிக்கப்படாமல் உள்ளனர். மாணவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, போராட்ட உரிமையைப் பறிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

இந்த முற்றுகைப் போராட்டம் ஒரு எச்சரிக்கைதான்; நாளை தமிழ்நாடு முழுவதும் கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் தொடரும்” என்றார்.

கல்லூரி கல்வி இயக்ககம் விளக்கம்:
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குநர் சிந்தியா செல்வி:

“கல்லூரி மாணவர்களிடையே ஒழுங்கையும் அமைதியையும் மேம்படுத்துவதற்கான முயற்சியின் அடிப்படையிலேயே கல்லூரி முதல்வர்களுக்கு அந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் வேறு எந்தத் தனிப்பட்ட காரணமும் கிடையாது. மேலும், அந்தச் சுற்றறிக்கை ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு, அதுகுறித்த தகவல் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் இணை இயக்குநர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது” எனத் தெளிவுபடுத்தினார்.

சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்ட போதிலும், மாணவர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தாலும் அதிரடி கைதால் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

மாநில அளவிலான தேர்தல் முடிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வத் தகவல்களை அறிந்துகொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் (TN SEC) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போராட்டம் அறிவிப்பு!

MUST READ