சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர் 6 பேர் கொண்ட மர்மக் கும்பலால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் நடந்த கொடூரம்
தாம்பரம் திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், இன்று அவர் தனது மோட்டார் சைக்கிளில் திருநீர்மலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல், திட்டமிட்டு அன்பழகனின் வாகனத்தை வழிமறித்துள்ளது. ஆபத்தை உணர்ந்து தப்பிக்க முயன்ற அவரை, நடுரோட்டில் ஓட ஓட விரட்டி, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் தலை மற்றும் உடல் பகுதிகளில் சராமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடியது.
போலீஸார் தீவிர விசாரணை
இக்கொலை குறித்துத் தகவல் அறிந்ததும், குரோம்பேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அன்பழகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
