சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த பல்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.


கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு எதிராக அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
மழைக்காலத் தொற்றுநோய் தடுப்பு – அமைச்சர்கள் அறிவுறுத்தல்:
கூட்டத்தில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “வருடந்தோறும் நடக்கும் சம்பிரதாயக் கூட்டமாக இது இருக்கக்கூடாது. அதிகாரிகள் தங்கள் பணியின் உன்னதத்தை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். நோய் வந்தபின் சிகிச்சையளிப்பதை விட, வருமுன் காப்பதே முக்கியம். வடகிழக்கு பருவமழையின் போது எத்தகைய தொற்றுநோய்களும் பரவாமல் இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து முழுப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “கொரோனா பெருந்தொற்றையே வெற்றிகரமாக எதிர்கொண்டவர்கள் நாம்; மழைக்கால சவால்களைச் சமாளிப்பது எளிதுதான். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் தெளிப்பது, கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதுடன், மழைக்காலங்களில் தடங்கலற்ற மின் இணைப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், கூடுதல் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி மழைகாலப் பணிகளைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.
பெண்களுக்கு எதிரான பேச்சை அரசு சகித்துக்கொள்ளாது – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி:
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜிடம், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அனைத்துத் தரப்பினரும், அனைத்துக் கட்சியினரும் இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். பெண்களைப் பற்றி யாரும் தரக்குறைவாகப் பேசக்கூடாது என்பதே மக்களின் அசைக்க முடியாத எதிர்பார்ப்பு. அதற்கான கடுமையான சட்ட நடவடிக்கையை இந்த அரசு உறுதியாக மேற்கொள்ளும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தொடரில் பங்கேற்கக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு இப்படிப் பேசப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. சட்டமன்றம் கூடவிருப்பது தெரிந்தே, பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்புடையதல்ல. பெயரை நேரடியாகக் குறிப்பிட வேண்டும் என்பதில்லை; எந்தப் பெண்ணாக இருந்தாலும் தவறு தவறுதான். பெண்களுக்கெதிரான குற்றங்களையும், அருவருக்கத்தக்க கொச்சை வார்த்தைகளையும் பேசிவிட்டு யாரும் எளிதில் கடந்துபோய்விட முடியாது.
முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இதுபோன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. பெண்களை இழிவுபடுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வலிமையான எச்சரிக்கையை விடுக்கும் வகையிலும் அரசின் நடவடிக்கை இருக்கும். அரசியலை எப்போதுமே அரசியல் ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசக் கூடாது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
