சென்னை மணலியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 2-வது மண்டலக் குழு கூட்டம், மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அரசின் மக்கள் நலப்பணிகள் முடங்கியுள்ளது குறித்தும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்தும் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உறுப்பினர் அடுக்கடுக்கான புகார்கள்
கூட்டத்தில் பேசிய 18-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதர், அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தது முதல் கடந்த மூன்று மாதங்களாக மணலியில் எவ்வித அடிப்படைத் திட்டங்களும் மக்கள் நலப்பணிகளும் நடைபெறாமல் முற்றிலும் முடங்கியுள்ளன. திட்டங்கள் எதுவும் நடக்காத இந்தச் சூழலைப் பார்க்கும்போது, இது ஆட்சி மாற்றமா அல்லது அதிகாரிகள் மாற்றமா என்ற கேள்வி எழுகிறது. பொதுமக்களின் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் பிரச்சினையான வேகத்தடை அமைத்துக் கொடுக்கும் எளிய கோரிக்கையைக் கூட மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

மின்வாரிய பொறியாளரை வெளுத்து வாங்கிய மண்டலக் குழு தலைவர்
அதிமுக உறுப்பினரின் புகாரைத் தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய மண்டலக் குழுத் தலைவர் ஆறுமுகம், மின்வாரியத்தின் மீது கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தினார். மின்வாரிய உதவிப் பொறியாளர் (AE) தனது செல்போனைத் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மின்சாரப் பிரச்சினைகள் குறித்துப் பேச பொதுமக்கள் மட்டுமின்றி, மண்டலக் குழுத் தலைவரே தொடர்பு கொள்ள முயன்றாலும் அவரைத் தொடர்புகொள்ள முடிவதில்லை என்றார்.
மேலும், “தொகுதி மக்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். மக்களுக்குப் பிரச்சனை குறித்துத் தெரிவிக்காமல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டால், இரண்டு மணி நேரம் போராடும் மக்கள் விரைவில் மின்வாரிய அலுவலகத்தில் 24 மணி நேரமும் தங்கும் நிலை ஏற்படும்” என்று அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தவெக எம்எல்ஏ செந்தில்குமார் எச்சரிக்கை
திமுக மண்டலக் குழுத் தலைவரின் புகார்களைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மின்வாரிய மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கைச் சுட்டிக்காட்டி காட்டமாகப் பேசினார்.
“பொதுமக்கள் நள்ளிரவு 12 மணி, 1 மணி, அதிகாலை 2 மணி என எந்த நேரத்திலும் தூக்கமில்லாமல் அவசரப் பிரச்சினைகளைக் கூறுகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண வேண்டிய மின்வாரிய அதிகாரிகளோ அலட்சியமாக நினைத்துத் தங்களது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறீர்கள். மாநகராட்சி அதிகாரிகள் தங்களுடைய கடமைகளைச் சரியாகச் செய்யாததால், அவர்களின் பணிகளைக் கூட நாங்கள்தான் (மக்கள் பிரதிநிதிகள்) முன்னின்று செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மேலும், “அடுத்த முறை நடைபெறும் மண்டலக் குழு கூட்டத்திற்கு மின்வாரியத்தின் உயர் அதிகாரிகள் கட்டாயமாக நேரில் பங்கேற்க வேண்டும்” என்றும் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், புதிய கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொகுதிப் பணிகள் தொய்வடைந்திருப்பதும், மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் போனை அணைத்து வைத்து அலட்சியம் காட்டுவதும் மணலி மண்டலக் குழு கூட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உசிலம்பட்டியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: செப்டம்பர் 25-ல் கோலாகலத் தொடக்கம்!
