தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அப்பணியிட நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஆதி திராவிடர் நலத்துறை செயலர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை களிமங்கலத்தைச் சார்ந்த ரஞ்சித் குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம் வருமாறு மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுகள்
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், நான் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவன் என் சமூகம் குறித்து பல்வேறு பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். ஆதி திராவிடர் நலத்துறை என்பது பட்டியல் சமூக மக்களின் சமூக – பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்படும் ஒரு சிறப்பு நிறுவனமாகும். தாட்கோ பல ஆண்டுகளாக தங்களுக்கு எதிராக வரும் வழக்குகளில் ஆஜராவதற்காகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களையே நியமித்து வந்துள்ளது.
இந்நிலையில், எந்தவொரு பொது அறிவிப்பையும் வெளியிடாமலும், விண்ணப்பங்கள் கோரப்படாமலும், தகுதி அளவுகோல்களை நிர்ணயிக்காமலும், வெளிப்படையான தேர்வு முறையைப் பின்பற்றாமலும் தன்னிச்சையாகப் பட்டியல் சமூகம் சாராத மாதவன் என்பவர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். உரிய விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படாததால் இதனை ரத்து செய்ய வேண்டும். மேலும், எதிர்காலத்தில் வழக்கறிஞர் நியமனங்களின் போது பொதுவான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, உரிய விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
நீதிபதிகள் எழுப்பிய கேள்வி, இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கறிஞர் நியமனம் என்பது அரசு வழக்கறிஞர் நியமனமா அல்லது தனிப்பட்ட முறையில் துறைச் செயலாளர்களால் நியமிக்கப்படும் நியமனமா என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மனுதாரரின் புகார் குறித்து ஆதி திராவிடர் நலத்துறை செயலர், சட்டத்துறை செயலாளர், தாட்கோ நிர்வாக இயக்குநர் மற்றும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மாதவன் ஆகியோர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
