Homeசெய்திகள்கட்டுரைமேகதாது அணை விவகாரம்: நாளை மறுநாள் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் - தவெக அரசுக்கு கிருஷ்ணசாமி,...

மேகதாது அணை விவகாரம்: நாளை மறுநாள் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் – தவெக அரசுக்கு கிருஷ்ணசாமி, வேல்முருகன் கடும் கண்டனம்!

-

- Advertisement -

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்தும், காவிரி உரிமையை மீட்பதற்காகவும் அனைத்துக் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை மறுநாள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதற்கிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கிருஷ்ணசாமி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு மற்றும் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாகக் கலந்துகொண்டு தவெக அரசின் முதல் பட்ஜெட் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். செய்தியாளர்களின் சந்திப்பு விவரங்கள் கோர்வையாகக் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

மேகதாது

we-r-hiring

மேகதாது அணை விவகாரம் – நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்!

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகள் முழுமையாகப் பாலைவனம் ஆகிவிடும் என்று எச்சரித்தார். கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்தும், காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி உரிய நீரைத் திறந்துவிடக் கோரியும் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பதால் திறக்கப்படும் உபரிநீரைக் காட்டி, தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியடைய முடியாது எனவும், எந்தச் சூழலிலும் மேகதாது அணை கட்டப்படாது என்பதை மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“எதிர்பார்ப்பை ஏமாற்றிய தவெக அரசின் பட்ஜெட்!” – கிருஷ்ணசாமி சாட்டையடி!

தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கை குறித்துப் பேசிய கிருஷ்ணசாமி, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவசப் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, தாய்மாமன் சீர் (புதுமணத் தம்பதிகளுக்கான அண்ணன் சீர்) போன்ற எண்ணற்ற வாக்குறுதிகள் எந்த அளவுக்கு இடம்பெறும் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்ததாகத் தெரிவித்தார்.

ஆனால், அண்ணன் சீர் அறிவிப்பிற்கு வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை முற்றிலுமாகப் பூர்த்தி செய்யவில்லை என்றார். பட்ஜெட் தயாரிப்பதற்கான எந்தச் சிரத்தையையும் அரசு எடுக்காமல் மேலோட்டமாகவே தாக்கல் செய்துள்ளதாகவும், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்குப் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டிய அவர், பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியைக் குறைத்திருக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

“இது ரீல் ஆட்சி; நீட் விலக்கு போராளியைக் கண்டுகொள்ளாத அரசு!” – வேல்முருகன் ஆவேசம்!

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நீட் விலக்கு கோரி உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் அனிதாவின் சகோதரர் உள்ளிட்டவர்களைத் தமிழ்நாடு அரசு சார்பாக யாரும் நேரில் சென்று சந்திக்கவோ, கோரிக்கைகளைக் கேட்கவோ இல்லை என்று குற்றம் சாட்டினார். தவெக அரசு என்பது ‘ரியல் ஆட்சி’ அல்ல, மாறாக அதுவொரு ‘ரீல் ஆட்சி’ என்பதைத் தங்களின் செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருவதாக அவர் சாடினார்.

மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் ஆணவப் படுகொலைகள் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், டாஸ்மாக் மதுபானங்களுக்கு முன்பதிவு முறை மற்றும் எலைட் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு மதுவிலக்கை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக மதுவை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளிக்காமல் மௌனம் காப்பது எப்படி ஜனநாயகமாகும் என்றும் வேல்முருகன் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.

MUST READ