நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பான விருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், தனது ஆதரவாளர்கள் அனைவரும் கையில் “நாட்டாமை குடும்பம்” எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
திடீரெனத் தோன்றிய சிந்தனை – சரத்குமார் விளக்கம்
நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய நடிகர் சரத்குமார் கூறியதாவது:
“எனது சிந்தனையில் திடீரென உதித்த யோசனைதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். நமது குடும்பத்தின் தனித்துவமான அடையாளமாக நாம் அனைவரும் இதைக் கருதுகிறேன். நான் வேறு எதைப் பற்றியும் பெரிதாக யோசிக்கவில்லை; நம்மை நாமே அடையாளப்படுத்திக்கொள்ள ‘நாட்டாமை குடும்பம்’ என்று கையில் பச்சை குத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. ஆனாலும், இது யாரையும் வற்புறுத்திச் செய்யும் செயல் அல்ல; விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகப் பச்சை குத்திக்கொள்ளலாம்” என்றார்.


நேரடி சந்திப்புக்கான புதிய ஏற்பாடு?
தொடர்ந்து பேசிய அவர், தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை நேரடியாகச் சந்திப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறித்தும் பேசினார். “நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றால், அதற்காக அவர்களுக்கு ‘கிரீன் கார்ட்’ போன்ற ஒன்றை வழங்கலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், கையில் இந்த அடையாளம் பச்சை குத்தப்பட்டிருந்தால், அது நமது சொந்தக் குடும்பம் என்ற உறவை வலுப்படுத்தும். கையில் அந்தப் பச்சை அடையாளம் இருந்தால், என்னை எவரும் எளிதில் நேரடியாக வந்து சந்திக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
தனது பிறந்தநாளைத் தன் ஆதரவாளர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடிய நடிகர் சரத்குமார், அவர்களுடன் இதுபோன்ற வித்யாசமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள விடுத்திருக்கும் இந்தக் கோரிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.
