மலையாளத் திரையுலகில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, இப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இவர்களின் அடுத்த புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.


பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படம் திரையுலக வட்டாரங்களின் தகவல்படி, இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ள இப்புதிய திரைப்படம், இருவரின் திரைப் பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் எனத் தெரியவருகிறது. மேலும், ‘குப்பி’ திரைப்படத்தில் முதன்மைச் சிறுவனாக நடித்து கவனம் ஈர்த்த குழந்தை நட்சத்திரம் சேத்தன் ஜெயலாலும் இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.
திரைப் பாதையில் மாபெரும் திருப்புமுனை 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘குப்பி’, நடிகர் டொவினோ தாமஸின் திரைப் பாதையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் ‘தேஜஸ் வர்க்கி’ எனும் பொறியாளராக அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அதேபோல், இயக்குநர் ஜான்பால் ஜார்ஜுக்கு இப்படம் ஒரு கனவு அறிமுகப் படமாக அமைந்து, மலையாளத் திரையுலகில் மிகச் சிறந்த இயக்குநராக அவரை அடையாளம் காட்டியது.
இருவரின் தொடர் வெற்றிப் பயணம் குப்பி படத்திற்குப் பிறகு என்னு நிண்டே மொய்தீன், தீவண்டி, கோதா, மாயநதி, மின்னல் முரளி, 2018 மற்றும் அஜயண்டே ரண்டாம் மோஷனம் (ARM) எனத் தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைக் கொடுத்து, இன்று இந்திய அளவில் அறியப்படும் முன்னணி நாயகனாக டொவினோ தாமஸ் உருவெடுத்துள்ளார்.
அதேபோல, இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் தனது அடுத்த படைப்பான அம்பிலி மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘ரோமான்சாம்’ (Romancham) திரைப்படத்தைத் தயாரித்து முன்னணி தயாரிப்பாளராகவும் மலையாள சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள் குப்பி’ திரைப்படத்தின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
