நெல்சன் திலீப்குமார் இயக்கம், அனிருத் இசையில் திரையரங்குகளை அதிரவைத்த பிரம்மாண்டத் திரைப்படத்தின் சாதனைகளை நினைவுகூரும் ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்ததுடன், ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் திரைப்படமாகவும் அமைந்தது.

இப்படத்தில் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கதை மற்றும் திரைக்கதையை அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளராக ஆர். நிர்மல், கலை இயக்குநராக டி.ஆர்.கே. கிரண் மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநராக ஸ்டன் சிவா ஆகியோர் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
அத்துடன், இந்தியாவின் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்தது இதன் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மலையாளத்தில் இருந்து மோகன்லால் (மேத்யூ), கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார் (நரசிம்ஹா), பாலிவுட்டில் இருந்து ஜாக்கி ஷெராஃப் (கமேந்திர சிங்) ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி அசத்தினர். மேலும், வில்லனாக வர்மன் கதாபாத்திரத்தில் விநாயகன், முத்துவேல் பாண்டியனின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன், மகனாக வசந்த் ரவி மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்திருந்தனர். ‘காவாலா’ பாடலுக்குத் தமன்னா நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இயக்குநர் நெல்சனின் தனித்துவமான ‘டார்க் காமெடி’ மற்றும் ஆக்ஷன் கலந்த திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வகையில், இசையமைப்பாளர் அனிருத்தின் மாஸ் பின்னணி இசையும் ‘காவாலா’, ‘ஹுகும்’, ‘ரத்தமாரா’ போன்ற பாடல்களும் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, திரையரங்குகளில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் என்ட்ரி காட்சிகளுக்கு அனிருத் அமைத்த பின்னணி இசை பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
திரையரங்குகளில் “சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பற” என்ற முழக்கத்தோடு கொண்டாடப்பட்ட ‘ஜெயிலர்’ படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் சிறப்பு ஹேஷ்டேகுகளை உருவாக்கி ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.
என்.ஆர். பெயரில் விருது வாங்குவது தேசிய விருதைவிட உயர்ந்தது: இயக்குனர் சீனு ராமசாமி புகழாரம்!
