சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல இயக்குனர் சீனு ராமசாமிக்குச் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


“உலகில் கோயிலில் குடியிருக்கும் முதல்வர் என்.ஆர்.”
விழாவில் உரையாற்றிய இயக்குனர் சீனு ராமசாமி, “நான் ‘சினிமாவின் ஆன்மா’ என்ற புத்தகத்தை எழுதினேன். 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் நல்ல சினிமா குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் நோக்கில் இதனைப் படைத்தேன். இந்த நூலை முதன்முதலில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் கைகளில்தான் வழங்கினேன். உலகில் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஒரு முதல்வர் உண்டென்றால் அது நம் என்.ஆர். ஐயா மட்டும்தான்.
அவரைப் பார்த்ததும் நான் மிகுந்த மரியாதையுடன் அவரது பாதத்தில் விழுந்து வணங்கினேன். அவர் உடனடியாக அந்தப் புத்தகத்தை அன்போடு பெற்றுக்கொண்டு, கல்வி அமைச்சரிடம் வழங்குவதாகத் தெரிவித்தார். பொதுவாகப் பிறந்தநாள் விழாக்களில் மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பார்கள்; ஆனால், இங்கே ஏற்றப்பட்ட விளக்கை அத்தகைய பண்பாடும் எளிமையோடு தொடர்ந்து ஏற்றித் கொண்டே இருக்கிறார்கள். தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பிறந்தநாளாகவே நான் இதனைக் கருதுகிறேன்” என்றார்.
“தேசிய விருதைவிட உயர்ந்தது என்.ஆர். பெயரிலான விருது”
தொடர்ந்து பேசிய அவர், “தியாக ருசி என்றால் என்ன? எத்தகைய சூழலிலும் எதற்கும் அசைந்து கொடுக்காமல் உறுதியாக இருப்பதுதான். அப்படிப்பட்ட பெருமகனான வ.உ. சிதம்பரனாரைப் பார்த்து அரசியலுக்கு வந்தவர்தான் பெருந்தலைவர் காமராஜர். எனக்கு எப்போதும் வழிகாட்டியாகத் திகழ்பவர் என்.ஆர். ஐயா அவர்கள்தான். பிரபலமாக இருப்பது வேறு; புகழோடு வாழ்வது வேறு, மற்றவை எல்லாமே வெறும் விளம்பரம்தான்.
ஆனால், என்.ஆர். ஐயாவின் பெயரில் இந்த விருதைப் பெறுவது என்பது தேசிய விருதைவிடவும் உயர்ந்ததாக நான் கருதுகிறேன். ஏனெனில், தேசிய விருதுகள் எப்போதும் தியாகிகளால் வழங்கப்படுவதில்லை” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் எளிமையையும் ஆளுமையையும் பாராட்டி இயக்குனர் சீனு ராமசாமி பேசிய இந்தப் பேச்சு அரங்கில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
40 வயதிற்கு மேல் நண்பர்கள் கூடவே இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது: மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி!
