Homeசெய்திகள்சினிமா40 வயதிற்கு மேல் நண்பர்கள் கூடவே இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது: மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி!

40 வயதிற்கு மேல் நண்பர்கள் கூடவே இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது: மனம் திறந்த ஆர்.ஜே. பாலாஜி!

-

- Advertisement -

பிரபல ஸ்பாட்ஃபெய் (Spotify) தளத்தில் மீண்டும் ஒலிபரப்பாக உள்ள ‘பச்ச சட்ட’ நிகழ்ச்சி குறித்த சிறப்பு கலந்துரையாடல் கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி தனது ரசிகர்களைச் சந்தித்து கலகலப்பாகப் பேசினார்.

we-r-hiring

“40 வயதிற்கு மேல் உறவுகள் மாறும்” – ஆர்.ஜே. பாலாஜி தத்துவார்த்தப் பேச்சு

நிகழ்ச்சியில் உறவுகள் மற்றும் நட்பு குறித்துப் பேசிய அவர், “எனக்கு நெருக்கமானவர்கள் யாராவது என்னை விட்டுப் பிரிந்து சென்றால், எல்லோரையும் போலவே எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், கடைசி வரை எல்லோரையும் நம்மகூடவே கூட்டிட்டுப் போக முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ‘நீ முன்ன மாதிரி இல்லை, ரொம்ப மாறிட்ட’ என்று பல பேர் என்னிடம் கேட்பார்கள். நாம் யாராலும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடியாது.

எனக்கு 20 வயது இருந்தபோது நான் வேறொரு ஆளாக இருந்தேன்; 30 வயதில் நிறைய நேரம் இருந்தது, மற்றவர்களுடன் கனிவாக 10, 12 மணி நேரம் இருக்க முடிந்தது. ஆனால், இப்போது எனக்கு 40 வயதாகிறது; என் வாழ்வில் பல முன்னுரிமைகள் உள்ளன. எனவே, 20 வயதுப் போலவோ அல்லது 30 வயதுப் போலவோ இப்போது இருக்க முடியாது. இளம் வயதில் நண்பர்கள் வாழ்க்கை முழுவதும் கூடவே வர வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் நம்மகூட இருந்து ஏதோ ஒரு விஷயத்தைச் செய்துவிட்டுப் பிரிந்து செல்வதுதான் பல உறவுகளின் இயல்பு” என்று மனம் திறந்தார்.

பழைய வாழ்க்கை குறித்து மிரட்டலான ஒப்புதல் வாக்குமூலம்

தனது இளமைக்கால வாழ்க்கை குறித்துப் பேசுகையில், “ஆர்.ஜே. பாலாஜி ஆவதற்கு முன்பு ஒரு பாலாஜி இருந்தாரே, அவரிடம் நான் உரையாடல் செய்வது போல் ஒரு எபிசோடு போட்டால் எப்படி இருக்கும்? அந்த உரையாடல் முழுவதும் கெட்ட வார்த்தைகளாகத்தான் இருக்கும்! அந்தப் பழைய பாலாஜியை எனக்கு அறவே பிடிக்காது. நான் எவ்வளவோ ஆகியிருக்கலாம்; ஒரு வழிப்பறி கொள்ளைக்காரனாகவோ அல்லது ஒரு சைக்கோ கொலைகாரனாகவோ கூட மாறியிருக்கலாம். அப்படிப்பட்ட அந்தப் பழைய பாலாஜியை நானே போலீசில் பிடித்துக் கொடுத்திருப்பேன்” என்றார்.

படப்பிடிப்பு ரகசியங்களும், ‘காந்தாரா’ தாக்கமும்

திரைப்பட உருவாக்கம் மற்றும் தனது வேலை முறைகள் குறித்துப் பேசுகையில், “எல்லா இயக்குநர்களும் அருகில் ஒரு மானிட்டரையும் எடிட்டரையும் வைத்துக்கொண்டு ஸ்பாட் எடிட் செய்வார்கள். ஆனால், நான் ஸ்பாட் எடிட் செய்வதே கிடையாது. நான் செய்த வேலையைத் திரும்பப் போய் பார்ப்பது எனக்குப் பிடிக்காது; கடவுள் புண்ணியத்தால் நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிடுவேன். எனக்கு ஸ்பாட்டில் போய் புதிதாக யோசித்து வசனம் எழுதும் தைரியம் கிடையாது. படம் இயக்குவது என்பதே எனக்குப் பெரும் பயத்தையும் பதற்றத்தையும் தரும் விஷயம் என்பதால், படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே அனைத்து வசனங்களையும் பேப்பரில் தெளிவாக எழுதிவிடுவேன்.

‘காந்தாரா’ படம் பார்த்தபோது, தியேட்டரில் மக்கள் அனைவரும் ஒருவித மயக்கும், வசீகரிக்கும் நிலையில் இருந்தார்கள். நமக்குத் தெரியாத ஒரு தெய்வம் அந்தப் படத்தில் வரும்போதே திரையரங்கம் அப்படி சிலிர்க்கிறதென்றால், நம் ஊரில் உள்ள சாமிகளை வைத்து படம் பண்ணலாமா என்று தோன்றியது. அந்தப் படம் பார்த்து ஈர்க்கப்பட்டுத்தான் அந்த ஒரு காட்சியை நான் கூடுதலாக அமைத்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ‘பச்ச சட்ட’ நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அருமையான இசையை அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ரசிகர்களின் கேள்விகளுக்கு கலகலப்பாகவும் அதேசமயம் ஆழமான கருத்துக்களுடனும் ஆர்.ஜே. பாலாஜி பதிலளித்த இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆவடியில் சோகம்: பாம்பு கடித்து 4-ஆம் வகுப்பு மாணவன் பரிதாப உயிரிழப்பு!

MUST READ