நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.


விசாரணையின் பின்னணி
நடிகர் விக்ரம் அரியவகை குரங்கு ஒன்றைக் கையில் ஏந்தியவாறு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மேற்கொண்ட நிலையில், சென்னை அக்கரை பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், மறைந்த நடிகருமான மு.க.முத்துவின் வீட்டிற்கு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்க வகையில், நடிகர் விக்ரமின் மகள், மறைந்த மு.க.முத்துவின் பேரனைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த உறவுமுறை காரணமாக, தன் மகளைப் பார்ப்பதற்காக நடிகர் விக்ரம் மு.க.முத்துவின் வீட்டிற்குச் சென்றிருந்த போதுதான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குரங்கு பரிமாற்றம் மற்றும் வீடியோ வெளியீடு
நடிகர் விக்ரம் அங்கு சென்றிருந்த வேளையில், ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) எனப்படும் மிக அரியவகை வெளிநாட்டு விலங்கான குரங்கை விலைக்கு விற்பனை செய்வதற்காகச் சிலர் அங்கு வந்துள்ளனர். இதைப் பார்த்த நடிகர் விக்ரமின் மகள் அந்த அரியவகை குரங்கை வாங்கத் திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த குரங்குடன் எடுக்கப்பட்ட வீடியோவை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எனினும், குடும்பத்தினருக்கு அந்த குரங்கை வாங்குவதில் விருப்பம் இல்லாத காரணத்தினால், குரங்கை வாங்கும் முடிவைக் கைவிட்டு அதனைத் திருப்பி அனுப்பி விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்டப்பூர்வ அனுமதியா? வனத்துறை தீவிர விசாரணை
இதனைத் தொடர்ந்து, அந்த அரியவகை விலங்கை விற்பனை செய்ய வந்த நபர்கள் உரிய சட்டப்பூர்வ ஆவணங்களுடன் தான் வந்தார்களா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ‘Parivesh 2.0’ இணையதளம் மூலமாக உரிய அனுமதி பெற்ற பின்னரே இந்த அரியவகை குரங்கை விற்பனை செய்ய அவர்கள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஆவணங்கள் உண்மையானவையா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டவைதானா என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரபல நடிகர் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவின் புதிய வியூகம், சோனியா காந்தியின் சமரச முயற்சி!
