விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘Baththa’ திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் பார்த்த பிறகு ஷங்கர் தனது பாராட்டுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


‘Baththa’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், சிறுவன் சாய் பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1986-ம் ஆண்டு காலகட்டத்து மெட்ராஸ் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், ஒரு கேங்ஸ்டர் மற்றும் சிறுவனுக்கு இடையே உருவாகும் எதிர்பாராத உறவை மையமாகக் கொண்டுள்ளது.
படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், “நல்ல கதை, மனிதநேயம், சிறப்பான நகைச்சுவை மற்றும் பல இடங்களில் கைதட்ட வைக்கும் தருணங்களுடன் அழகான திரைப்படம்” என்று பாராட்டியுள்ளார்.
மேலும், படத்தின் கதாபாத்திரத் தேர்வு மற்றும் நடிகர்களின் நடிப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகபாவனைகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு தரமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக படத்தில் நடித்துள்ள சிறுவன் சாய் பிரித்விராஜின் நடிப்பை ஷங்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்ற அளவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். லிஜோமோல் ஜோஸின் நடிப்பும் இயல்பாகவும் அழகாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பின்னணி இசையையும் ஷங்கர் பாராட்டியுள்ளார். வழக்கமான பாணியில் இல்லாமல் புதுமையாக அமைந்துள்ள பின்னணி இசை, சில காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், படத்தில் இடம்பெறும் அப்பாவித்தனம் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த பல காட்சிகள் தன்னைத் தொட்டதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். இப்படத்தை தயாரித்த அட்லீ மற்றும் பிரியா அட்லீ உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இறுதியாக இயக்குநர் பாலாஜி தரணீதரனை குறிப்பிட்ட ஷங்கர், ‘Baththa’ அவருடைய மற்றொரு மறக்க முடியாத படைப்பு என்று பாராட்டியுள்ளார்.
ஷங்கரின் பாராட்டைத் தொடர்ந்து இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் உள்ளிட்ட திரையுலகினரும் ‘Baththa’ படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
‘டோரதி’ கதை திருட்டு புகார்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது போலீஸ் கமிஷனரிடம் மனு!
