Homeசெய்திகள்சினிமாஇரண்டாம் உலகப்போர் பின்னணியில் தமிழர்களின் தியாகத்தைப் பேசும் ‘Death Railway’ – பிப்ரவரியில் வெளியிடத் திட்டம்!

இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தமிழர்களின் தியாகத்தைப் பேசும் ‘Death Railway’ – பிப்ரவரியில் வெளியிடத் திட்டம்!

-

- Advertisement -

‘யாத்திசை’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘Death Railway’ திரைப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.இரண்டாம் உலகப்போர் பின்னணியில் தமிழர்களின் தியாகத்தைப் பேசும் ‘Death Railway’ – பிப்ரவரியில் வெளியிடத் திட்டம்!

நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இயக்குநர் தரணி ராஜேந்திரன், நடிகர்கள் பவானி, சேயோன் மற்றும் தயாரிப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், வரலாற்றுப் பின்னணி மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பேசினர்.

அப்போது இயக்குநர் தரணி ராஜேந்திரன் கூறியதாவது:

‘யாத்திசை’ திரைப்படத்திற்குப் பிறகு தான் இயக்கியுள்ள இரண்டாவது படமாக ‘Death Railway’ வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சசி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டாம் உலகப்போரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த காலகட்டம் ஒருபுறம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும், மறுபுறம் இருண்ட காலமாகவும் இருந்தது. ஜப்பான் ராணுவம் பர்மாவைக் கடந்து இந்தியாவை நோக்கி வந்தது.

அதேபோல், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்களின் பங்கு அதிகமாக இருந்தது. சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. தமிழர்கள் மட்டுமின்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் பின்னணியில் கதை அமைந்திருந்தாலும், உண்மையில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட காதல் கதையாகவும் இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் அசோக் செல்வன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரின் முழுமையான பங்களிப்பும் படத்தை நிறைவு செய்ய உதவியது. குறிப்பாக, தயாரிப்பாளர் தனது கனவுக்கு உயிர் கொடுத்தவர். தன்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்கிய அவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பல சவால்களைக் கடந்து படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், அதற்காக முன்கூட்டியே விரிவான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மொத்தமாக ஒரு ஆண்டு படப்பிடிப்பு நடைபெற்றிருந்தாலும், இந்தப் படத்திற்காக இரண்டு ஆண்டுகள் உழைத்துள்ளதாகக் கூறினார். தமிழர்களுக்கான அங்கீகாரமாகவே ‘Death Railway’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி மாதம் திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படத்திற்காகப் பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகால உழைப்பையும் பலரது பங்களிப்பையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒப்பிட வேண்டாம் என்றும், உண்மையான உழைப்பில் இப்படம் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

படத்தை முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகை பவானி, இந்தப் படம் தனக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளதாகக் கூறினார். போரின் பின்னணியில் உருவாகியுள்ள காதல் கதை இப்படத்தின் சிறப்பம்சம் என்றும், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் தனக்குப் பெரிய அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்காகப் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகே பணியாற்றியதாகவும் கூறினார்.

நடிகர் சேயோன் பேசுகையில், ‘யாத்திசை’ படத்தில் நடித்த கதாபாத்திரத்தைப் போலவே ‘Death Railway’ படத்திலும் தனக்கு முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கதைக்குத் தேவையான பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தயாராகியதாகவும், கதாபாத்திரத்திற்காகத் தனது உடல் எடையை 70 கிலோவிலிருந்து 60 கிலோவாகக் குறைத்ததாகவும் கூறினார்.

நடிகர்கள் விக்ரம், சூர்யா ஆகியோரைத் தனக்கு முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உடல் எடையைக் குறைப்பதைச் சிரமமாகக் கருதவில்லை என்றும், விரும்பியே அந்த மாற்றத்தைச் செய்ததாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாக ஒத்திகை பார்த்து நடித்தது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.

இறுதியாகப் பேசிய தயாரிப்பாளர் கமலக்கண்ணன், தனது முதல் திரைப்படத்தைத் தயாரித்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்தார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ராம் சரணின் வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்…. ‘RC17’ படத்தின் அதிரடி அப்டேட்!

MUST READ