பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பிரம்மாண்டத் திரைப்படங்களை இயக்கி தென் இந்திய சினிமாவில் அதிக வசூலை வாரிக்குவித்தவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது படங்கள் என்றாலே பிரம்மாண்ட பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள் என இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அந்த வகையில், தற்போது இவர் மகேஷ் பாபுவின் 29-வது படமாக உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா இணைந்து நடிக்க, வில்லனாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வருகிறார்.
‘வாரணாசி‘ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இப்படம் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்பட்டு வருகிறது.
இருப்பினும், சமீபகாலமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும், திட்டமிட்டபடி ஏப்ரல் 7-ஆம் தேதியே ‘வாரணாசி’ திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டால், அந்த படத்தை திரையரங்குகளில் கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ‘வாரணாசி’ குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜனவரி மாதத்திற்குள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முழுமையாக முடிக்கவும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அனைத்து ஃபார்மேட் தொடர்பான பணிகளையும் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கிடையில், படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் சுமார் 400 முதல் 450 கோடி ரூபாய் வரை இந்த ஓடிடி ஒப்பந்தத்தை இறுதி செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மாதத்திற்குள் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி ஒப்பந்தம் கையெழுத்தானால், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஏப்ரல் 7-ஆம் தேதி ‘வாரணாசி ரிலீஸ் உறுதியாகிவிடும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
