அரசன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடக்கத்திலிருந்தே மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வெளியான போஸ்டர்கள் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. முன்னதாக இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ‘ஃபயர்’ ப்ரோமோவில் அனிருத்தின் இசை இடம்பெறவில்லை. இதனால் வெற்றிமாறனுக்கும் அனிருத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அனிருத் ‘அரசன்’ படத்திலிருந்து விலகிவிட்டதாகப் பேச்சுகள் எழுந்தன. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்தத் தகவலை மறுத்து, யூகங்களுக்கும் கற்பனைகளுக்கும் தன்னால் பதிலளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
அதாவது தீபாவளிக்கு ரசிகர்கள் பலரும் அந்த எட்டு நிமிட ப்ரோமோவை எதிர்பார்த்துதான் காத்துக் கொண்டிருந்தனர். அனிருத் தனது திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததால்தான் அந்த 8 நிமிட ப்ரோமோவுக்கு அவரால் இசையமைத்துக் கொடுக்க முடியவில்லை. அனிருத்தின் இசை இடம் பெறவில்லை என்றாலும் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக அந்த ஃபயர் ப்ரோமோ வெளியிடப்பட்டது. மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 8 நிமிட ப்ரோமோ வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத், நாளை (நவம்பர் 21) நடைபெற உள்ள தனது திருமண வரவேற்பை முடித்த கையோடு முதலில் இந்த 8 நிமிட ப்ரோமோவுக்குத்தான் இசையமைக்கப் போகிறார் என்றும், அரசன் பட குழுவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் மாற்றம் குறித்த அனைத்து வதந்திகளுக்கும் இந்தப் ப்ரோமோ முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிம்பு ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
