சீன் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களைத் தன்வசம் வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவரை ரசிகர்கள் ‘தி ஒன்’ என்று கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சில படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமையாத நிலையில், 2026-ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. அந்த வகையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படமும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தன.
அடுத்ததாக, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ‘சீன்’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்து பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படம் உலக அளவில் ரூ. 260 கோடியைக் கடந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய படங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், 225-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலுவான வரவேற்புடன் மூன்றாவது வாரமாக வெற்றி நடைபோட்டு வருகிறது ‘சீன்’. இந்நிலையில், இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருப்பதாக தமிழ்நாட்டில் இப்படத்தை ரிலீஸ் செய்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது.
