குக் வித் கோமாளி அஸ்வினின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது ரன்னர்-அப் ஆக வெற்றி பெற்ற இவருக்கு அப்போதே ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். குறிப்பாக, அஸ்வின் – சிவாங்கி காம்போ பலரையும் கவர்ந்ததுடன், அதற்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
அதேசமயம் இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ‘செம்பி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது ஓரிரு ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். அந்த பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது. இது தவிர அஸ்வின், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது 40 படங்களின் கதையை கேட்டு தூங்கிவிட்டேன் என்று பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதன் பிறகு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்னிப்பும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் கடைசியாக 2026-ல் வெளியான ‘ஹாட்ஸ்பாட் 2 மச்’ படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு படங்களில் கவனம் செலுத்தி வந்த அஸ்வின் குமார் இன்று (நவம்பர் 20) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். மறைந்த இயக்குநர் ராஜசேகரின் பேத்தியான புவனேஸ்வரியை அவர் இன்று கரம் பிடித்துள்ளார்.
இவர்களது திருமணத்திற்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
