சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். அதே சமயம், இவரது ‘அமரன்’ திரைப்படம் இவரது திரைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையையும், இந்திய அளவில் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இப்போது ‘சேயோன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது. இதற்கு அடுத்து ‘SK 27’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதைத் தொடர்ந்து, ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 28-வது படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணி ‘டான்’ படத்தில் இணைந்த நிலையில், அந்தப் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில், இவர்கள் இருவரின் காம்போவில் உருவாகும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இதன் ஷூட்டிங் 2027 ஜனவரி மாதம் தொடங்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது தற்போது அந்தத் தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாகத் தெரிகிறது. எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
