விஷாலின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், கடைசியாக ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை விஷால், தானே இயக்கி நடித்திருந்த நிலையில், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அடுத்ததாக சுந்தர். சி இயக்கத்தில் ‘புருஷன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2027 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக விஷால், கருடன், லீடர் படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், அதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் 15-ம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இந்தப் படத்தில் சில மாற்றங்கள் நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு காரணமாக, லலித் குமார் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், படக்குழு வேறு தயாரிப்பு நிறுவனத்தைத் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் திரைக்கதைப் பணிகளை முடித்ததும், வி.எஃப்.எஃப் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் இயக்கத்தில் ‘இரும்புத்திரை 2’ படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக பல தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஷால் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
