தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் ஆர்யா ஹலோ காதல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ஆர்யாவின் 40-வது படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்யாவுடன் இணைந்து சில்வர் கிரைன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் டிசம்பர் 4-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ‘ஹலோ காதல்’ படத்தின் ட்ரைலர் இன்று (நவம்பர் 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில், தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவருக்குத் தமிழ் ரசிகர்களும் ஏராளமாக உள்ளனர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து, இந்திய அளவில் பல ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவர், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
