லோகேஷ் கனகராஜன் மிஷ்கினுடன் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
’மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’, ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமானார். இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களைத் தயாரித்து வரும் லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவ்வாறு இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மையுடன் வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் மிஷ்கினுடன் இணையப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், அடுத்த படம் குறித்துப் பேசும்போது லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ள தகவலைப் பகிர்ந்துள்ளார். ‘டிசி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னை அணுகிய லோகேஷ் கனகராஜ், நடிகர் நரேனை வைத்து ஒரு படம் செய்யுமாறு கேட்டதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். மிகத் திறமையான இயக்குநரான லோகேஷ் தன்னிடம் வந்து நரேனை வைத்துப் படம் பண்ணச் சொன்னது முதலில் தனக்குப் புரியவில்லை என்றும், தனது இன்ஸ்பிரேஷன்களில் ஒன்றான ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்றும், அதனைத் தானே தயாரிப்பதாகவும் லோகேஷ் தன்னிடம் கூறியதாக மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய மிஷ்கின், “லோகேஷ், நான் உன்னுடன் ஒரு படம் பண்ண விரும்புகிறேன். நீ இப்போது ஒரு நிஜ ஹீரோவாகிவிட்டாய்.உனக்கு நான் ஒரு அற்புதமான படத்தைக் கொடுப்பேன். அது ‘அஞ்சாதே பாகம் 2’ ஆக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயம் நரேனை வைத்து நான் ஒரு படம் பண்ணப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் – மிஷ்கின் கூட்டணி குறித்த இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் மிஷ்கின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
