சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கொசஸ்தலையாற்றில் டன் கணக்கில் மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமான கேள்வியை எழுப்புகிறது.


இரசாயனக் கழிவுகளால் ஆபத்து
மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதக்கின்றன என்றால், அந்தத் தண்ணீரில் ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதே பொருள். இரசாயனக் கழிவுகள் கலந்திருக்கலாம் என மீனவர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், இதை வெறும் சந்தேகம் என புறந்தள்ள முடியாது. எண்ணூர், மணலி தொழில் பகுதியைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் நீண்டகாலமாக மாசுபாடு பிரச்சினையை எதிர் கொண்டு வருவது ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் மற்றும் அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு முறையும் மீன்கள் செத்து மிதந்த பிறகுதான் ஆற்றின் நிலை குறித்து அதிகாரிகளுக்கு நினைவு வர வேண்டுமா?
மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
மீனவர்களின் படகு கடன், வலைச் செலவு, குடும்ப உணவு, குழந்தைகளின் கல்வி என மீனவக் குடும்பத்தின் வாழ்வாதாரமே மீன்வளத்துடன் இணைந்திருக்கிறது.
இன்று மீன்கள் அழிகின்றன. தொடர்ந்து நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டால், மீன்வளம் குறைந்து, எண்ணூர் மீனவ மக்களின் தலைமுறை வாழ்வாதாரமே ஆபத்துக்குள்ளாகும்.
வளர்ச்சிக் கொள்கையா? மாசு உற்பத்தியா?
தமிழ்நாட்டிற்கு தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் தேவை. ஆனால் நிறுவனங்களின் இலாபத்திற்காக ஆறுகளையும் கடலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிப்பதை வளர்ச்சி என்று ஏற்க முடியாது.
நிறுவனங்களுக்கு லாபம், மக்களுக்கு மாசு – இதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக் கொள்கையா?
தவேக தலைவர் வேல்முருகன் முன்வைக்கும் கோரிக்கைகள்:
சுயாதீன ஆய்வு: இந்தச் சம்பவத்தை வழக்கமான விசாரணையாக முடித்து விடாமல், சுற்றுச்சூழல் அவசரநிலையாக கருதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர், படிவம், இறந்த உயிரினங்களின் மாதிரிகளை சேகரித்து சுயாதீன ஆய்வகங்களில் பரிசோதிக்க வேண்டும்.
அளவுருக்கள் பரிசோதனை: கரைந்த ஆக்சிஜன், அமோனியா, ஹைட்ரோகார்பன்கள், கன உலோகங்கள் உள்ளிட்ட முக்கிய அளவுருக்களை ஆய்வு செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகள் தணிக்கை: சுற்றுவட்டார தொழிற்சாலைகளின் கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, சட்டவிரோத கழிவு வெளியேற்றம் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
வெளிப்படைத்தன்மை & தண்டனை: ஆய்வு முடிவுகளை முழுமையாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரணம் & இழப்பீடு: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடி நிவாரணத்துடன் வாழ்வாதார இழப்பிற்கான உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
கொசஸ்தலையாற்றை உடனடியாகப் பாதுகாக்க வேண்டும்; மீனவர்களின் தலைமுறை வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
“சொந்த மண்ணிலேயே அகதிகளா?” – கடும் கோபத்தில் கொந்தளித்த சீமான்!
