பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் பான் மசாலா நிறுவனத்தின் மறைமுக விளம்பரத்தில் (Surrogate Advertising) நடிப்பதை நிறுத்த வேண்டும் என மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் அம்மாநில அரசு, 15 நாட்களுக்குள் இதற்கு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


மறைமுக விளம்பரப் பிரச்சனை:
ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் ‘விமல் ஏலக்காய்’ (Vimal Elaichi) என்ற பெயரிலான விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், ‘விமல்’ என்ற பிராண்ட் பெயரானது முக்கியமாகத் தடை செய்யப்பட்ட பாக்கு மற்றும் புகையிலைப் பொருட்களுடன் (Pan Masala) தொடர்புடையதாக உள்ளது. ஏலக்காய் என்ற பெயரில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மறைமுகமாக விளம்பரம் செய்வது நுகர்வோரை திசை திருப்பும் செயலாகும் என எஃப்.டி.ஏ (FDA) தெரிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகள்:
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006 (Food Safety and Standards Act)-ன் கீழ், தவறான அல்லது நுகர்வோரை ஏமாற்றும் விளம்பரங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். இத மீறும் நபர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே மூன்று பாலிவுட் பிரபலங்களுக்கும் இந்த இறுதிக்கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் தீவிர நடவடிக்கை:
மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அண்மைக் காலமாகவே சுகாதாரமற்ற உணவகங்கள், கிடங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த பிரபலங்களின் விளம்பரங்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
- ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு 15 நாட்கள் கெடு விதித்து மகாராஷ்டிர எஃப்.டி.ஏ நோட்டீஸ்.
- ஏலக்காய் என்ற பெயரில் பான் மசாலா பிராண்டுகளுக்கு மறைமுக விளம்பரம் செய்யக் கூடாது என எச்சரிக்கை.
- சட்ட விதிகளின்படி நுகர்வோரை ஏமாற்றும் விளம்பரங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
