தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒட்டனூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் “ட்ரெண்டிங் பென்னாகரம்” என்ற பக்கத்தை உருவாக்கி, பல்வேறு வகையான பதிவுகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2026 தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 367 வாக்குகளை பெற்றுள்ளார்.


தற்போது பென்னாகரம் தவெக எம்எல்ஏ கஜேந்திரன் செய்ய வேண்டிய, பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மேலும் சட்டமன்றத்தில் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று தவெகவினர் பதிவிட்ட கருத்துக்களை வைத்து, பென்னாகரம் தொகுதிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், வீடியோ பதிவுத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் பென்னாகரத்தில் பொதுவெளியில் ஆபாசமாக பேசிய, சிவா என்பவருக்கு தற்போது பென்னாகரம் தொகுதி மட்டும் உள்ளடக்கிய தருமபுரி புறநகர் மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு வழங்கியதால், பொதுவெளியில் ஆபாசமாக பேசியதற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என வீடியோ பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக தவெக பற்றி வீடியோ வெளியிட்டதாக தவெக நிர்வாகிகள் தருமபுரி புறநகர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் சிவா, சந்தோஷ், சிலம்பரசன், சிங்காரவேலன் உள்ளிட்டோர் இளவரசனை அழைத்து, அவரது செல்போனை பறித்து தவெக பற்றி இனி வீடியோ எதுவும் சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது என மிரட்டியுள்ளனர்.
மேலும் இனி இது போன்று செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், வீடியோ பதிவிட மாட்டேன் என்று எழுதியும் வாங்கி உள்ளனர். மேலும் இளவரசன் பயன்படுத்தி வந்த ட்ரெண்டிங் பென்னாகரம் என்ற பக்கத்தை டெலிட் செய்தும், செல்போனில் இருந்த போட்டோ வீடியோ உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இளவரசன் அனுமதியில்லாமல் அழித்தும் உள்ளனர். மேலும் இனிமேல் வீடியோ பதிவிட கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த இளவரசன் தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார். மேலும் தன்னுடைய கருத்து சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில், என்னுடைய மொபைல் செல்போனை பிடுங்கி தகவல்களை அழித்தும், சமூக வலைதள பக்கத்தை அழித்த தவெக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தவெக நிர்வாகிகளால் தனக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் காலை முதல் மாலை வரை தருமபுரி எஸ் பி அலுவலகத்திலேயே இளைஞர் இளவரசன் இருந்தது குறிப்பிடப்பட்டது.
இது குறித்து பென்னாகரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் கேட்டபோது
பென்னாகரம் மக்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளார்கள் அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் என்னிடம் நேராக வந்து மனு கொடுத்தால் உடனடியாக செயல்படுத்த ஆவலோடு இருக்கிறேன். ஆனால் அவர் இதுவரை என்னை நேரில் வந்து சந்திக்காமல் தேவையில்லாமல் அவதூறுகளை பரப்பி வருகிறார். இதனால் கட்சியினர் அவரை நேரில் அழைத்து உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் என்று பேசி உள்ளனர். மிரட்டும் தோனியில் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
அதேபோல் நான் சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்று அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கேட்டிருக்கிறேன் எனக்கான வாய்ப்பு சபாநாயகர் அளிக்கும்போது கண்டிப்பாக பென்னாகரம் மக்களுக்காக பேசுவேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார்.
