விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது விழுப்புரம் ஆவின் கூட்டுறவு ஒன்றியம்.
இங்குள்ள 275 கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள்தோறும் சுமார் 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக பால் வரத்து பாதியாகக் குறைந்து நாள்தோறும் 35 ஆயிரம் லிட்டர் மட்டுமே ஆவினுக்குக் கிடைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஆவின் பால், நெய் மற்றும் வெண்ணெய்க்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

கடையை மூடும் நிலையில் ஆவின் முகவர்கள்
மாவட்டம் முழுவதிலும் உள்ள 500 ஆவின் முகவர்களுக்கு தினசரி விநியோகிக்கப்படும் பாலின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக நெய் மற்றும் வெண்ணெய் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தனஞ்செழியன் (ஆவின் முகவர்):
“வாடகைக்குக் கடை பிடித்து ஆவின் பொருட்கள் விற்று வருகிறோம். நெய், வெண்ணெய் கிடைக்காததாலும் பாலின் அளவு குறைந்ததாலும் மாதத்திற்கு ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.”
தனியாருக்குச் செல்லும் பால்: கொள்முதல் விலையே காரணம் ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ.33 மட்டுமே வழங்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.42 முதல் ரூ.44 வரை வழங்கிப் பாலைக் கொள்முதல் செய்கின்றன. மாட்டுத் தீவன விலை உயர்வால் பாதிக்கப்படும் விவசாயிகள், வேறு வழியின்றித் தனியாருக்குப் பாலை ஊற்றுகின்றனர்.
அரிகரன் (மாநிலத் துணைத்தலைவர் – பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்):
“முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்துவதாகக் கூறியிருந்தார். ஆனால் இதுவரை விலை உயர்த்தப்படவில்லை. உடனடியாகக் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே கூட்டுறவு சங்கங்களையும் பால் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.” நுகர்வோர்கள் ஏமாற்றம் & ஊழியர்கள் அச்சம்
ராமகிருஷ்ணன் (நுகர்வோர்):
“தரமான ஆவின் பால், நெய் மற்றும் வெண்ணெயையே காலம் காலமாகப் பயன்படுத்தி வந்தோம். தற்போது கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளோம். அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.”
ஆவின் நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது, “பால் வரத்து குறைவால் ஆவின் நிர்வாகம் தள்ளாடி வருகிறது. இதே நிலை நீடித்தால் ஆவின் நிறுவனம் மூடப்படுமா, எங்கள் வேலை பறிபோகுமா என்ற அச்சம் நிலவுகிறது” என வேதனையுடன் தெரிவித்தனர்.
விழுப்புரம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே ஆவின் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன் ஆவின் நிறுவனத்தைச் சீராக இயக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
