அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளால், அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் அவரது மக்கள் ஆதரவு வெறும் 33 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


பொருளாதார நெருக்கடியும் சுங்க வரிப் போரும்
1974-ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி, இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் கூடுதல் சுங்க வரிகளை விதித்தது. இந்த நடவடிக்கையானது சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு இருந்த ராஜதந்திர உறவுகளை மோசமடையச் செய்தது. மேலும், இதன் நேரடி விளைவாக அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டதால், அந்நாட்டுப் பொதுமக்களும் வணிகர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வெளிப்படையான அதிருப்தியில் அமெரிக்கர்கள்
‘ராய்ட்டர்ஸ்’ மற்றும் ‘இப்சோஸ்’ (Ipsos) நிறுவனங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில், அமெரிக்கர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் டிரம்ப்பின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் போர் தொடர்பான முடிவுகள் முற்றிலும் பயனற்றவை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளான நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுக்கு எதிராக டிரம்ப் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்ததும், கனடா மற்றும் டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்து பகுதியை அமெரிக்காவுடன் இணைப்பேன் என்று அவர் விடுத்த மிரட்டல் தொனியிலான அறிக்கைகளும் அமெரிக்க மக்களால் அறவே ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஈரான் விவகாரமும் தேர்தல் தோல்வியும்
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா சந்தித்து வரும் பின்னடைவுகள் மற்றும் மாகாணத் தேர்தல்களில் டிரம்ப்பின் குடியரசு கட்சி அடைந்த தொடர் தோல்விகள், டிரம்ப் மீதான நம்பிக்கையை மேலும் சிதைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தனது முரட்டுத்தனமான வெளியுறவுக் கொள்கைகளால் நட்பு நாடுகளைத் தள்ளிவைத்ததோடு, சொந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ள டிரம்ப், தற்போது கடும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி போன்ற பிரிட்டனின் ஈடுபாடு நேரடி போர்தான்: ரஷ்யா கடும் எச்சரிக்கை!
