டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.


ஜப்பானின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தால் பதறியடித்துக்கொண்டு சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இபாரகி, ஷிபா (சிபா), சைடமா ஆகிய நகரங்களில் வசித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேத விவரங்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு
கட்டடங்கள் லேசாக சேதம் அடைந்துள்ளன. இதனால் 23 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம் எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த மாத நிலநடுக்கம்
கடந்த மாதம், ஜப்பானின் தென்கோடித் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 38 பேர் உயிரிழந்தனர்; மேலும் 364 பேர் காயமடைந்தனர். 1,500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
